திரைப்பட பைனான்சியர் அன்புச்செழியன், கோபுரம் பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனமும் நடத்தி வருகிறார். இவருடைய கோபுரம் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்கமகன், வெள்ளைக்காரதுரை, மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட சில படங்களை தயாரித்துள்ளது.
சினிமா பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. மதுரையில் 30 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும் சோதனை நடைபெறுகிறது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அன்புச்செழியன் வீட்டில் காலை 5 மணி முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்.
நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள வீடு, சென்னை தியாகராய நகர், ராகவயா தெருவில் உள்ள அவரது அலுவலத்தில் இன்று காலை 6 மணி முதல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளன.
மதுரை மேலமாசி வீதியில் இருக்கக்கூடிய அவருடைய அலுவலகம், கீரைத்துறை பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய சொந்த வீடு மற்றும் தெப்பக்குளம் பகுதியில் இருக்கக்கூடிய அவருடைய வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. Also Read – கவர்ச்சிக்கு மறுக்கும் சாய்பல்லவி கடந்த 2003-ஆம் ஆண்டு நடிகர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்புச்செழியன் என குற்றச்சாட்டு எழுந்தது.
அப்போது சென்னை திநகரில் உள்ள அவரது அலுவலகத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். பின்னர் கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடித்த பிகில் பட விவகாரம் தொடர்பாக அன்புச்செழியன் வீட்டில் சோதனை நடைபெற்றது. அப்போது, கணக்கில் வராத பணத்தை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் கடந்த 2020 பிப்ரவரி மாதம் ஒருமுறை அன்புச்செழியனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அதில், வீடு மற்றும் அலுவலகங்களில் கணக்கில் வராத 77கோடி ரூபாய், மற்றும் 300 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாக அப்போதைய வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைனான்சியர் அன்புச்செழியனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு அலுவலகத்திலும் வருமானவரித்துறை சோதனை நடைபெறுகிறது. சென்னை, தி.நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அலுவலகத்தில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சில தயாரிப்பாளர்கள் பெயரும் வருமானவரி சோதனை பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல படத் தயாரிப்பாளர்களான எஸ்.ஆர்.பிரபு மற்றும் ஞானவேல்ராஜா ஆகிய இருவரது அலுவலகங்களிலும் வருமான வரிச் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் காலை முதல் சோதனை நடத்தி வருவது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.