பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகாலச் சட்டங்களை அமுல்படுத்துவதன் ஊடாக பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கோரி தாக்கல் செய்த மூன்று அடிப்படை உரிமை மனுக்களை எதிர்வரும் 12 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதியரசர்களான யசந்த கோதாகொட மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மனுக்கள் தொடர்பில் மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசாங்க சட்டத்தரணி ரஜீவ் குணதிலக்க தெரிவித்தார்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள், இந்த மனுக்கள் அவசர காரணத்தின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், அவற்றை பரிசீலிக்க குறுகிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்படி, மனுக்களை எதிர்வரும் 12 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.