கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘விருமன்’ திரைப்படம் முதல் நாளான நேற்று (வெள்ளிக்கிழமை) ரூ.7 கோடி முதல் ரூ.8 கோடி வரை வசூலித்துள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி, அதிதி சங்கர் நடித்துள்ள திரைப்படம் ‘விருமன்’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தில் பிரகாஷ் ராஜ், சூரி, கருணாஸ், ராஜ்கிரண், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழகம் முழுவதும் 475 திரைகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம், முதல் நாளில் ரூ.7 கோடி முதல் 8 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கார்த்தி நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் முதல் நாள் ரூ.5.12 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் முதல் நாள் வசூலில் ரூ.36 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. விஜயின் ‘பீஸ்ட்’ ரூ.26.40 கோடியுடன் இரண்டாம் இடத்திலும், கமலின் ‘விக்ரம்’ ரூ.20.61 கோடியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.