வடக்கு கிழக்கு மக்களுக்கான கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என வலியுறுத்திய கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று நேறறு காலை முள்ளியவளை நீராவிப்பிட்டி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை நாட்டிற்குள் கௌரவமான உரிமையுடன்கூடிய அரசியல் தீர்வினை வலியுறுத்தியும், வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் என்பது ஜனநாயக உரிமையாகும்,13 ஆவது திருத்தச்சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப்பரவலாக்கத்துக்கான உரிமையினை உறுதிப்படுத்துகின்றது என்பதை வலியுறுத்தியும் இந்த கவனயீர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு திட்டத்தின் இன்று 20 ஆவது நாள் முல்லைத்தீவு முள்ளியவளையில் நீராவிப்பிட்டி கிராமத்தில் கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கவனயீர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்து அறிக்கை ஒன்றும் வாசிக்கப்பட்டுள்ளது இதில், கௌரவமான அரசியலுடன் கூடிய மக்கள் குரல் என்ற தொனிப்பொருளிலான கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்று முள்ளியவளை நீராவிப்பிட்டி பகுதியில் நடைபெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல்தீர்வு அதிகாரப் பரவலாக்கம் என்பது இலங்கையின் அரசியலமைப்பின் அங்கமாயிருப்பதுடன், சர்வதேச சமூகத்தினாலும் ஐக்கிய நாடுகள் சபையினாலும்; வரவேற்கப்படுகின்ற ஒன்றாகும்.
ஆகவே, எமக்கான உரிமையை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கும், நட்பு நாடான இந்தியாவுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் வலியுறுத்திக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளதுடன்.
வடகிழக்கு வாழ்கின்ற சிறுபான்மை மக்களின் உரிமையினை நிலைநாட்ட இந்த கவனயீர்ப்பு முன்னெடுக்கபடுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் முஸ்லீம்களும் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றார்கள்.
72 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கம் இன்னும் சிறுபான்மை மக்களுக்கான சம உரிமை வழங்கப்பாடாமல் இருக்கின்றது இறுதியா பாராளுமன்றத்தில் வெற்றியீட்டி ஜனாதிபதி சிம்மாசன உரையில் சிறுபான்மை மக்களுக்கும் சம உரிமை வழங்குவதாக கூறியுள்ளார் இவரின் இந்த உரையினை நாட்டில் நிலைநாட்ட வேண்டும்.
2010 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் முஸ்லீம்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள் ஆனால் முல்லைத்தீவில் திட்டமிடப்பட்ட மீள்குடியேற்றம் இன்னும் நடைபெறாமல் இருக்கின்றது காணிப்பிரச்சினை இன்னும் இருந்து கொண்டிருக்கின்றது இன்னும் அகதி வாழ்கையாகவே இருக்கின்றது. ஐனாதிபதி இதில் கவனம் செலுத்துவதுடன் வடக்கு மாகாண சபையும் இதில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.