அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே அவருக்கு சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், தலைசுற்றல், தைராய்டு, மரபுவழி தோல் அழற்சி, குடல் நோய், மூச்சுக்குழாய் அழற்சி, நரம்பு தளர்ச்சி போன்ற பல்வேறு நோய் பாதிப்புகள் இருந்துள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்துள்ளார். தோல் நோய்க்காக அவருக்கு ஸ்டீராய்டு எனப்படும் வலி நிவாரணி மருந்து கொடுக்கப்பட்டிருப்பது ஆஸ்பத்திரியின் ஆவணம் மற்றும் டாக்டர்களின் வாக்குமூலத்தில் தெரிகிறது. சர்க்கரை நோய் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு மிக அதிகமாக இருந்ததாகவும், ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக திராட்சை பழம், கேக், இனிப்பு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வந்ததாகவும் ஜெயலலிதாவின் குடும்ப டாக்டரான சிவக்குமார் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முடிவில், ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை நோய் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையால் ஏற்பட்ட இருதய செயலிழப்பு தான் அவரது மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாக தெரிகிறது.
டிசம்பர் 4-ந் தேதி ஜெயலலிதாவுக்கு மூச்சுவிடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது. அன்றைய தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. சி.பி.ஆர். எனப்படும் இருதய பகுதியில் அழுத்தம் கொடுக்கும் சிகிச்சையை தொடர்ந்து எக்மோ சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 24 மணி நேரமும் எக்மோ சிகிச்சைக்கு ஜெயலலிதா உட்படுத்தப்பட்டார். இருந்தபோதிலும் டிசம்பர் 5-ந்தேதி இரவு 11.30 மணிக்கு அவரது மூளை மற்றும் இதயம் செயலிழந்து உயிர் பிரிந்தது. ஜெயலலிதாவுக்கு தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த ஆய்வில் ஜெயலலிதாவுக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்பட்டதா? என்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டது.
ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக 5 முதல் 7 நாட்கள் அவருக்கு காய்ச்சல் மற்றும் குடல் இயக்க பாதிப்பு இருந்துள்ளது. 1998-ம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த அவரது குடும்ப டாக்டரான சிவக்குமார் 2016-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி முதல்-அமைச்சரின் உடல்நிலையை பரிசோதித்துள்ளார்.