ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்-2’ படத்தின் படப்பிடிப்பு, கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கியது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல்ஹாசனுடன் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, பிரியாபவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
பல்வேறு காரணங்களால் இதன் படப்பிடிப்பு 2020-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. பிறகு நடிகர் கமல்ஹாசன், ‘விக்ரம்’ படத்திலும் இயக்குநர் ஷங்கர், ராம் சரண் நடிக்கும் படத்திலும் கவனம் செலுத்தினர். கமலின் ‘விக்ரம்’ மெகா ஹிட்டுக்கு பிறகு, ’இந்தியன்-2’ படத்தைத் தொடங்குவதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸும் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நேற்று மீண்டும் தொடங்கியுள்ளது. இதற்கான பூஜையில் படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருப்பதால், அவர் இல்லாத காட்சிகள் இப்போது படமாக்கப்படுகின்றன. இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வந்தார். அவர் தெலுங்கு படத்தில் பிசியாகி விட்டதால் இப்போது ரவிவர்மன் இணைந்துள்ளார்.