அடுத்த வாரம் மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராகவுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு கொழும்பு பௌத்தலேக மாவத்தையில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த உத்தியோகபூர்வ இல்லமானது பௌத்தலோக மாவத்தை மற்றும் மலலசேகர மாவத்தைக்கு அடுத்ததாக அமைந்துள்ள விசாலமான வீடாகும். முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் இந்த வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார்.
மேலும், முன்னாள் ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமரான மகிந்த ராஜபக்சவுக்கு அரசாங்கம் 2 உத்தியோகபூர்வ இல்லங்களை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்று விஜேராம மாவத்தையிலும் மற்றையது புல்லர்ஸ் வீதியிலும் அமைந்துள்ளது. இதன்படி, ராஜபக்ச குடும்பத்திற்கு அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வீட்டு ஒதுக்கீட்டில் இருந்து 4 வது வீட்டை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எவ்வாறாயினும், முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா கடந்த வாரம், கோட்டாபய ஜனாதிபதி பதவியை விட்டு வெளியேறியதன் பின்னர், முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய எந்தவொரு சலுகைக்கும் அவருக்கு உரிமை இல்லை என தெரிவித்திருந்தார்.