யு.எஸ். ஓபன் போட்டியின் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்று அடுத்தச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஆட்டம் முடிந்த பிறகு தன்னுடைய ஓய்வுக்குப் பிறகான வாழ்க்கை குறித்து அவர் பேசினார்.
2022 யு.எஸ். ஓபன் போட்டி, ஆகஸ்ட் 29 இல் தொடங்கி செப்டம்பர் 11 அன்று நிறைவுபெறுகிறது. இந்நிலையில் விரைவில் ஓய்வு பெறவுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் சுற்றில் டான்கா கோவினிக்கை 6-3, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி 2-ம் சுற்றுக்கு முன்னேறினார். எஸ்டோனியாவின் அனெட் கொண்டாவிட்டை அடுத்தச் சுற்றில் எதிர்கொள்கிறார்.
ஆட்டம் முடிந்த பிறகு ரசிகர்கள் முன்னிலையில் செரீனா வில்லியம்ஸ் பேசியதாவது:
இந்த முடிவை (ஓய்வு பெறுவது) எடுப்பது கடினமாக இருந்தது. உங்களுக்கு ஒரு விஷயம் பிடித்துவிட்டால் அதிலிருந்து வெளியேறுவது மிகக்கடினம். இந்த விளையாட்டால் நீங்கள் நல்ல உடற்தகுதியுடனும் இருப்பீர்கள். அது ஒரு போனஸ். இந்த முடிவு ஒரு பரிணாம வளர்ச்சி. வாழ்க்கையில் இதர அத்தியாயங்களும் உள்ளன. எனக்குச் சொந்தமாக நிறுவனங்கள் உள்ளன. பலர் மீது எங்கள் மூதலீடுகளைச் செலுத்தியுள்ளோம். வீட்டில் அதிக நேரம் செலவழிப்பேன். ஆன்மிகம் சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்துவேன். அது செரீனா 2.0- ஆக இருக்கப் போகிறது. தினமும் காலையில் எழுந்து டென்னிஸ் பயிற்சிக்குச் செல்லவேண்டியதில்லை. ஒரு நல்ல தாயாக இருக்க விரும்புகிறேன். நான் விளையாடும் வரை எனக்கு ஆதரவளியுங்கள் என்றார்.
சமீபத்திய தோல்விகளால் செரீனாவின் 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கான காத்திருப்பு மீண்டும் தொடர்கிறது. இதுவரை 23 பட்டங்களை வென்றுள்ள செரீனா, இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்லும் பட்சத்தில் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்வார்.