காணாமல் போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்தவும் காணாமற் போனதற்கான சான்றிதழ்களை வழங்கவும் அதிகாரிகளுக்கு நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ பணிப்புரை வழங்கினார். அத்தோடு மோதல்களினால் இழந்த உயிர்கள் மற்றும் சேதமடைந்த சொத்துக்களுக்கு இழப்பீடு வழங்கவும் அதனை முறையாகவும் விரைவாகவும் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அவர் தெரிவித்தார். இலங்கையில் மனித உரிமைகளை பாதுகாத்தல், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப் புதல் தொடர்பான தேசிய பொறிமுறையின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி கலாநிதி விஜேயதாச ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்றது.
இதன்போதே அமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
நீதி அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின் போது, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியும் கலந்துகொண்டார். நீதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இக் கலந்துரையாடல் நேற்று முன்தின ம் (01) நடைபெற்றது.
மனித உரிமைகளைப் பாதுகாத்தல், அமைதியைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்தல், காணாமற்போனதாக உறுதிப்படுத்தப்பட்ட மற்றும் சேதப்படுத்தப்பட்ட சொத்துக்களுக்கு நட்டஈடு வழங்குதல், பாதுகாப்புப் படையினரின் வசமுள்ள தனியார் காணிகளை விடுவித்தல், அத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் இக்கலந்துரையாடலின் போது கவனம் செலுத்தப்பட்டது.
வருடாவருடம் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வில் பங்குபற்றும்போது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் போன்று எதிர்காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நிறுவப்படும் நிறுவனங்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
நாடுகளுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் வகையில் செயற்படுவது அதற்காக நிறுவப்பட்ட நிறுவனங்களின் பொறுப்பாகுமெனவும், தேசிய, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்துக்கான அலுவலகத்தினால் நாடு முழுவதையும் உள்ளடக்கியதாக எதிர்காலத்தில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள ‘கிராம ராஜயம்’ கருத்தாக்கம் உடனடியாக அறிமுகப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீதி அமைச்சர் வலியுறுத்தினார்.