நடிகை அமலா பாலுக்கு பவ்நிந்தர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்துள்ளனர்.
இதற்காக இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளனர்.
அப்போது அமலா பாலும் பவ்நிந்தர் சிங்கும் திருமணம் செய்துகொள்வதாக முடிவெடுத்திருக்கின்றனர். ஆனால் இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர்.
இந்த நிலையில் நடிகை அமலா பால் சார்பாக அவரது மேலாளர் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்தபோது பவீந்தர் சிங் உள்ளிட்ட சிலர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில், பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்பபடங்களை வெளியிட்டுவிடுவேன் என பவ்நிந்தர் சிங் மிரட்டுவதாகவும் அமலா பால் அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து பவீந்தர் சிங் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துஅவரை கைது செய்தனர். இதனையடுத்து வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
அவரது மனு இன்று விசாரணைக்கு வந்த போது அமலா பாலுக்கும் தனக்கு நடந்த பதிவுத் திருமண சான்றிதழை பவீந்தர் சிங் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளார்.
7.11.2018ல் பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததாக ஆதாரத்துடன் மனு அளித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நடிகை அமலாபாலுக்கு பவ்நிந்தர் சிங்குடன் திருமணம் நடந்தது உறுதியானது.