ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பொருளாதார குற்றங்கள் மற்றும் தண்டனையில்லா குற்றங்கள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்ற வேளையில், இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மௌனமாக செயற்படுவது ஏன் என எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
எதிர்க்கட்சித தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முதன்முறையாக நாட்டில் இடம்பெற்று வரும் பொருளாதார குற்றங்கள் குறித்து பேசப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நல்லாட்சி காலத்தில், காணாமற்போனோருக்கான நட்டஈடு அலுவலகம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான கட்டமைப்புகள் அமைக்கப்பட்டதுடன், யுத்தத்தின் போது கையகப்படுத்தப்பட்ட காணிகளை மீள கையளித்தல் உட்பட பல பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும் கடந்த சில வருடங்களாக, ராஜபக்ச தரப்பினரின் ஆட்சியின் போது, குறித்த செயற்பாடுகள் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கும் ராஜபக்ச தரப்பினரே காரணம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பொருளாதார குற்றமும் சுமத்தப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் மற்றும் சில அரச அதிகாரிகளின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் கண்காணிக்கப்படும் என அரசாங்கம் சில வாக்குறுதிகளை வழங்கியுள்ளதாகவும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சுயாதீனமாக அமைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளன.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என தாம் எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நிதிக்குற்றங்களை கையாள்வதற்கு பிரத்தியேகமாக சட்டங்கள் கொண்டுவரப்படுவது அவசியமாகும். ஆளும் கட்சியின் தலைவர்கள், ஜனாதிபதிகள், பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் நாட்டின் சொத்துக்களை திருடி நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ மறைத்து வைத்துள்ளமை நிதிக்குற்றமாகும். திருடப்பட்ட சொத்துக்களை மீட்பது தொடர்பில் சட்டம் ஒன்றை வரைவு செய்து அதனை சாசனம் ஆக்குவதன் வாயிலாக கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் சொத்துக்களை மீட்கமுடியும்.
எனவே குறித்த சட்டத்தினை அமுலாக்குவது முற்றிலும் அவசியமாகும் என எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.
மோசடி செய்பவர்களுக்கு அரசாங்கம் பாதுகாக்குமாயின், சர்வதேச சமூகத்துடன் இலங்கை இணக்கம் காண முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.