‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ரஜினிகாந்தை நடிக்க வைக்காதது ஏன்? என்பதற்கு டைரக்டர் மணிரத்னம் விளக்கம் அளித்துள்ளார். ‘பொன்னியின் செல்வன்’ படம் வருகிற 30-ந் தேதி வெளியாகிறது. இதையொட்டி சென்னை தரமணியில் ‘பொன்னியின் செல்வன்’ பட டைரக்டர் மணிரத்னம், நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு மற்றும் நடிகை திரிஷா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது டைரக்டர் மணிரத்னம் கூறியதாவது:- பழங்காலத்தில் எடுக்கப்பட்ட சரித்திர படங்களின் ஆடைபோல் இல்லாமல் நவீன காலத்துக்கு ஏற்ற வகையில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டன. தூய தமிழ் வசனங்கள் தான். ஆனால் சரளமாக பேச முடியும். நடிகர்கள் உணர்வுகளை வெளிப்படுத்த கூடிய வகையில் இருக்கும்.
வசனம் தூய தமிழில்தான் எழுதப்பட்டது. இந்த படத்தில் நாவலுக்கு ஏற்ற வகையிலும், என் பாணியும் கலந்து இருக்கும். புத்தகத்தை படித்த பாதிப்பில் என்னுடைய பங்களிப்பும் இருக்கும். 5 பாக புத்தகத்தை 2 பாகம் 3 மணி நேர பாடமாக தந்து உள்ளோம். ரஜினியை நடிக்க வைக்காதது ஏன்? ரஜினிகாந்த் கேட்ட கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தால் கதையை மாற்ற வேண்டிய நிலை வரும்.
இது சரியாக இருக்காது. சூட்டிங்கின்போது எல்லோரும் என்னை பாடாய் படுத்தினார்கள். நானும் எல்லோரையும் பாடாய் படுத்தினேன். வசனங்களில் ஜெயமோகன் சிறப்பாக செய்து உள்ளார். கொரோனா காலத்தில் நடிகர்கள் குண்டாகி விடுவார்களோ? என்று தான் பயந்தேன்.
கார்த்தி நடிகர் கார்த்தி கூறும்போது, “வந்தியத்தேவன் கதாபாத்திரமாக நடிப்பதில் பயம் குறைந்தது. குந்தவை, பூங்குழலி போன்ற கதாபாத்திரத்துடன் நடிக்கும் போது பயம் ஏற்பட்டது.
குதிரையில் சென்றபோது கீழே விழுந்த காட்சிகள் படத்தில் வருமா? என்பதை மணிரத்னம்தான் சொல்ல வேண்டும்” என்றார். திரிஷா நடிகை திரிஷா கூறியதாவது:- இந்த படத்தில் விக்ரமுக்கு தங்கையாகவும், ஜெயம் ரவிக்கு அக்காவாகவும் நடிக்க வைத்ததற்கு மணிரத்னத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்.
படத்தில் நடித்த பிறகு அண்ணா, தம்பி, தங்கை என்ற உணர்வுதான் ஏற்பட்டது. இது எனக்கு சவாலாக இருந்தது. சரித்திர படத்தில் செந்தமிழில் பேச வேண்டிய நிலை. வசனங்கள் வாயில் நுழையவே இல்லை. தமிழே கஷ்டம். செந்தமிழ் அதைவிட கஷ்டம். நான் இப்படி பேசியிருக்கிறேன் என மகிழ்ச்சி அடைந்தேன்.
கொரோனா முதல் ஊரடங்கிற்கு பின் சூட்டிங் சென்றது மகிழ்ச்சியாக இருந்தது. ‘பொன்னியின் செல்வன்’ கதையை ஆங்கிலத்தில் படித்தேன். படத்தில் ஜஸ்வர்யா ராயை சந்திக்கும் காட்சி முக்கியமானது. சரித்திர படம் நடித்தது புதிய அனுபவமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார். ஜெயம் ரவி நடிகர் ஜெயம் ரவி கூறுகையில், “ராஜராஜ சோழன் யார்?. அவர் என்ன பண்ணியிருக்கிறார்? என்பதை கவனத்தில் கொண்டு நடிக்க வேண்டும்.
அந்த பொறுப்புடன் நடித்து உள்ளோம். சுருட்ட முடி என்பதால் நேராக வளரும். கொரோனா காலத்தில் முடியை வீடியோ எடுத்து வைத்து கொண்டேன். அந்த தலை முடி ஸ்டைலை நிறைய பேர் பின்பற்றுவார்கள். படத்தில் மக்களை நம்பாதவன் மக்களை ஆள முடியாது என்ற வசனம் மிகவும் பிடித்து இருந்தது” என்றார்.
விக்ரம் பிரபு நடிகர் விக்ரம் பிரபு கூறுகையில், “சினிமாவில் இயக்குனரை நம்பிதான் செல்ல வேண்டும். இந்த கதையை படித்தது இல்லை. திறந்த புத்தகமாக சென்றோம்.
வசனங்கள் கஷ்டமாக இருந்தது. கதாபாத்திரம் எப்படி செய்ய வேண்டுமோ? அப்படி செய்து உள்ளேன். அப்பாவுடன் நடித்தால் நல்ல படத்தில் நடிக்க வேண்டும் என நினைத்தேன்.
அது ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் முடிந்தது. அப்பாவையும், என்னையும் மணிரத்னம் இயக்கியது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.