வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ளது டர்ஹாம் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழத்தின் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மேற்கொண்ட வித்தியாசமான ஆய்வின் சுவாரசிய முடிவு தான் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.
அதாவது தாயின் கருவில் இருக்கும் குழந்தைகள் பல்வேறு உணவின் வாசனைகள் மற்றும் சுவைகளை உணர்ந்து எவ்வாறு முக பாவனைகளை வெளிப்படுத்துகின்றன என்பது தான் அந்த ஆராய்ச்சி.
டர்ஹாம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் 100 கர்ப்பிணிப் பெண்களிடம் 4டி அல்ட்ராசவுண்ட் பரிசோதனைகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது 35 கர்ப்பிணி பெண்களுக்கு கேரட் சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டது.
அவர்கள் அதை எடுத்துக்கொண்ட 20 நிமிடங்களுக்கு பிறகு கருவில் இருக்கும் குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரிப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரிய வந்தது. அதே நேரத்தில் மற்ற 35 கர்ப்பிணி பெண்களுக்கு முட்டைக்கோஸ் போன்ற ‘இலை தாவர உணவு’ சுவை கொண்ட காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டது.
இதை அந்த கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்ட சில நிமிடங்களுக்கு பிறகு அவர்களின் குழந்தைகள் ‘அழுகை முகத்துடன்’ இருப்பது அல்ட்ராசவுண்ட் பரிசோதனையில் தெரியவந்தது.
இந்த ஆய்வின் போது உணவின் சுவையை உணர்ந்து கருவில் குழந்தைகள் வெளிப்படுத்திய முக பாவனைகளின் புகைப்படங்களை டர்ஹாம் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.