உக்ரைனில் உள்ள டானட்ஸ்க், லூகன்ஸ்க், ஸ்பெரெசியா, கெர்சன் ஆகிய 4 பிராந்தியங்கள் ரஷியாவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக மாஸ்கோவின் க்ரெம்லின் மாளிகையின் புனித ஜார்ஜ் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதிபர் புதின் அறிவித்தார்.
உக்ரைனின் பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ரஷியாவின் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று உலக நாடுகள் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ரஷியாவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ரஷியாவின் நடவடிக்கைக்கு எதிராக ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க ஆதரவுடன் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
உக்ரைனின் எல்லைகளில் ரஷியாவால் கொண்டுவரப்பட எந்த ஒரு மாற்றத்தையும் உலக நாடுகள் அங்கீகரிக்க கூடாது மற்றும் உக்ரைனில் இருந்து ரஷியா உடனடியாக படைகளை வாபஸ் பெறுமாறு அந்த தீர்மானத்தில் கோரப்பட்டது.
இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு அதிகாரபூர்வ அனுமதி வழங்க மறுக்க வேண்டும் என்று ரஷியா கோரியுள்ளது. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினருக்கு கண்டனம் தெரிவிப்பது முன்னெப்போதும் இல்லாதது என்று ரஷிய பிரதிநிதி கூறினார்.
ஆகவே இந்தக் கண்டனத் தீர்மானத்திற்கு ரஷியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.ரஷியா வீடோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 10 நாடுகள் வாக்களித்தன.
இதற்கான வாக்கெடுப்பில் சீனாவுடன் சேர்ந்து இந்தியாவும் வாக்களிப்பதில் இருந்து விலகியது.இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் தீர்மானத்தைப் புறக்கணித்தன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற ரஷியா தடை கொண்டு வந்தால், இந்தக் கண்டனத் தீர்மானத்தை நிறைவேற்ற ஐ.நா பொதுச் சபையில் உலக நாடுகள் பங்கேற்று வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனாவின் ஆதரவு ரஷியாவுக்கு கிடைக்காததை மேற்கத்திய நாடுகள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றன. மேலும், ஐ.நா பொதுச் சபையின் வாக்கெடுப்பு மூலம் ரஷியாவிற்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா இப்போது முயற்சிக்கும்.