பொன்னியின் செல்வன் – பாகம் 1 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் தயாரான பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் 5 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டு ஓடிக்கொண்டு இருக்கிறது.
3 நாட்களில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து இருப்பதாக தகவல் வெளியானதால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அடுத்து பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் எப்போது வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த படத்துக்காக படப்பிடிப்பு தொடங்கும் முன்பே நடிகர்கள் நீண்ட தலைமுடி, தாடி வளர்த்தும் கடும் உடற்பயிற்சிகள் செய்தும் தோற்றத்தை மாற்றி இருந்தனர். முதல் பாகம் வெளியான பிறகு இரண்டாம் பாகத்துக்கான படப்பிடிப்பை நடத்தினால் மீண்டும் அவர்களை பழைய தோற்றத்துக்கு கொண்டு வருவது கஷ்டம் என கருதி முதல் பாகத்தை படமாக்கும்போதே இரண்டாம் பாகத்துக்கான முழு படப்பிடிப்பையும் சேர்த்து மணிரத்னம் நடத்தி முடித்து விட்டார்.
தற்போது 2-ம் பாகம் படத்துக்கு கிராபிக்ஸ், ரீ ரிக்கார்டிங் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் மட்டுமே நடந்து வருகின்றன. இந்தபணிகள் முடிந்ததும் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி 6 முதல் 9 மாதங்களுக்குள் 2-ம் பாகம் வெளியாகும் என்று மணிரத்னம் ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தை வெளியிட ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.