மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ திரைப்படம் வெளியான 5 நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.100 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கல்கி எழுதிய வரலாற்றுப் புனைவான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். கார்த்தி, ஐஸ்வர்யா ராய், விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன் என பெரிய நடிகர் பட்டாளமே நடித்த இந்தத் திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், சுபாஷ்கரனின் லைகா புரொட்க்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
பான் இந்தியா முறையில் உருவான இப்படத்தின் இரண்டு பாகங்களின் பட்ஜெட் ரூ.500 கோடி எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், படம் முதல் நாள் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.25.86 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ரூ.21.34 கோடியையும், மூன்றாவது நாள் ரூ. 22.51 கோடி வசூலையும் ஈட்டியுள்ளது.
நான்காவது நாள் ரூ.13.08 கோடி, ஐந்தாவது நாளான நேற்று ரூ.17.95 கோடி என மொத்தம் இதுவரை நான்கு நாட்களில் ரூ.100.74 கோடியை படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு வெளியான படங்களில் ‘விக்ரம்’, ‘வலிமை’, ‘பீஸ்ட்’, ‘கேஜிஎஃப் 2’ படங்களுக்கு பிறகு 5-வது படமாக ரூ.100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளது ‘பொன்னியின் செல்வன்’. உலக அளவில் இப்படம் இதுவரை ரூ.240 கோடி அளவில் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.