PTA: சஜித் – பிரசன்ன வாதப் பிரதிவாதத்தால்..

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற வாதப் பிரதிவாதங்களால் இன்று (05) பாராளுமன்றம் சில நிமிடங்கள் சூடுபிடித்தது.

பயங்கரவாத தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டார். அதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொரடா, எதிர்க்கட்சி தலைவர் பயங்கரவாதிகளை பாதுகாக்க முயற்சிக்கின்றார் என பதிலளித்தார்.

குறித்த வாத பிரதிவாதம் வருமாறு…

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
பயங்கரவாதத்தை தடுப்பதற்கு ஒரு நாட்டில் ஏற்பாடுகள் இருக்க வேண்டும். அதுபற்றி எந்த விவாதமும் இல்லை. மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்கு ஏற்பட்ட சேதத்தை நாம் யாரும் மறந்துவிடவில்லை. நான் என் தந்தையை இழந்தேன். அது போல இலட்சக்கணக்கான மக்கள் தங்கள் தாய், தந்தையர், சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்களை இழந்துள்ளனர். தீவிரவாதிகளை தடுப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் கேஸ்பஹா சந்தியில் அன்றைய தினம் பாராளுமன்றத்தில் இருந்தது போன்று குண்டுகள் எதுவும் இல்லை. நான் ஒன்று உங்களுக்குச் சொல்கிறேன்.

(ஆளும் கட்சியின் பிரதான கொரடா பிரசன்ன ரணதுங்க ஏதோ கூறுகிறார்.)

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
ஐயா கொஞ்சம் கேளுங்கள். சொல்வதை மட்டும் கேளுங்கள். அத்துகோரளவின் கொலையை ஒரு பயங்கரவாதச் செயலாக ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறுகிறேன். அத்துகோரள எம்.பி.யின் படுகொலையை ஒரு கொலைச் செயலாகவே நான் பார்க்கிறேன். அதற்காக நடவடிக்கை எடுங்கள். இப்ப நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அத்துகோரள எம்.பியின் கொலைக்கு வசந்த முதலிகேதான் காரணம் என்கிறீர்களா? எனவே பயங்கரவாதிகளையும் கொலையாளிகளையும் பாதுகாக்க நாங்கள் தயாராக இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.

சபாநாயகர்:
நாம் இந்த தேவையற்ற விவாதத்திற்கு செல்ல மாட்டோம். இப்போது உங்கள் கருத்தைச் சொன்னீர்கள்தானே. அதற்காகத்தானே உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. நீங்கள் அதை முடிக்கிறிர்கள் இல்லையே. நீங்கள் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பதால் உங்களுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. சரி சரி ஒரு நிமிடம் எடுத்துக் கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
கௌரவ ரணதுங்க அவர்களே, உங்கள் வலி எனக்குப் புரிகிறது. கொஞ்சம் பேச இடம் தாருங்கள். பயங்கரவாதம், வீடுகளை எரித்தல், சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்றவற்றுக்கு எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உடன்பட மாட்டோம்.

ஆளும் கட்சியின் பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்க:
வன்முறைக்கு எதிரானவர்கள் என்கிறார்கள். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்கள் எவ்வாறு துன்புறுத்தப்பட்டனர் என்பதைக் கூறுங்கள். கடந்த காலத்தில் இவர்கள் எவ்வாறு வேலை செய்தார்கள்? இவர்கள் தான் போராட்டக்காரர்களுக்கு அரசியல் தலைமையை வழங்கினர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதில் சுமார் 600 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இவர்கள்தான் அவர்களை வழிநடத்தினார்கள். பேராதனை பீடாதிபதிக்கு மரண அச்சுறுத்தலும் எற்பட்டது.

கெளரவ சபாநாயகரே,

தமிதா இவரது மேடைக்கு சென்றதால், இ​வர் போராட்டக்காரர்கள் சார்பில் வாதிட முயற்சிக்கிறார்.

(இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையில் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இவ்வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் சபாநாயகரிடம் பேசுவதற்கு மேலும் நேரம் கோரினார்.)

சபாநாயகர்:
நீங்கள் 10 நிமிடங்களையும் எடுத்துள்ளீர்கள். தொந்தரவு செய்யாதீர்கள். பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ:
கௌரவ சபாநாயகர் அவர்களே, நாங்கள் பகிடிவதையை எதிர்க்கிறோம். பகிடிவதைக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள். நாம் அதற்கு எதிரானவர்கள். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி சும்மா இருப்பவர்களை கைது செய்ய வேண்டாம் என்று தான் நான் கூறுகிறேன். அதைத்தான் சொல்கிறேன். நாம் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள்.

Related posts