வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை உட்பட வட மாகாணத்திலுள்ள ஒரிரு தொழிற்சாலைகளிலும் சோளச் செய்கையிலும் பாரிய முதலீடுகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக பைனஸ் தனியார் நிறுவனத்தின் இலங்கை தலைவரும் ஜேர்மனியில் இருந்து தாயகம் வருகை தந்திருந்த முதலீட்டாளருமான மார்டின் ஜெயராஜ் தெரிவித்தார்.
முதலீட்டுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்றதும் நிதி முதலீட்டுடன் பணிகளை உடனடியாக ஆரம்பிக்கத் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தாய்நாட்டைக் கட்டியெழுப்ப ஒத்துழைப்புகளை நல்க முன்வருமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புலம்பெயர் இலங்கையருக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை அடிப்படையாகக் கொண்டு முதலீடுகள் ஊடாக உதவி ஒத்துழைப்புகளை நல்க சுவிட்சர்லாந்து நாட்டை தலைமையகமாகக் கொண்டுள்ள பைனஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.
இது தொடர்பில் பைனஸ் தனியார் நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் மார்டின் ஜெயராஜ், நிறுவனத்தின் உப தலைவர் பி. ஜோன் வசந்தபாலன், பணிப்பாளர் என்.எம்.எம். சபீஹ் ஆகியோர் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் செய்தியாளர் மாநாடொன்றை நடாத்தினர். அச்செய்தியாளர் மாநாட்டிலேயே நிறுவனத்தின் இலங்கைத் தலைவர் மார்டின் ஜெயராஜ் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பின் பிரகாரம் இங்கு முதலீடுகளை மேற்கொண்டு பொருளாதார மேம்பாட்டுக்கு ஒத்துழைப்பு நல்க நாம் முன்வந்துள்ளோம்.
இதற்கான தீர்மானமும் முடிவும் சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர் இலங்கையரான சிவபாதம் விக்னேஷ்வரனை தலைவராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் கொண்டுள்ள பைனஸ் தனியார் நிறுவனத்தினால் எடுக்கப்பட்டுள்ளது. உலகில் ஆறு நாடுகளில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு நடவடிக்கைகளில் எமது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
எமது தாய்த்திருநாட்டின் மேம்பாட்டுக்கு உதவும் வகையில் முதலிடும் நோக்கில் வாழைச்சேனை காகித தொழிற்சாலைக்கு நேரில் விஜயம் செய்து பார்வையிட்டுள்ளோம். அத்தோடு வடமாகாணத்திலுள்ள ஒரிரு தொழிற்சாலைகளிலும் சோளச் செய்கையிலும் முதலில் முதலீடுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம். அதற்கான அங்கீகாரம் அரசாங்கத் தரப்பில் கிடைக்கப்பெற்ற மறுகணமே பணிகளை ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம்.
இதன் ஊடாக நாட்டுக்கு தேவையான காகிதாதிகளை இங்கேயே உற்பத்தி செய்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். மேலும் சோளமானது திரிபோஷா சத்துணவுக்கும், கோழித்தீவனம், மாட்டுத் தீவனம் உள்ளிட்ட விலங்கு தீவனத்திற்கும் முக்கிய இடுகைப் பொருளாகும். அதனால் நாட்டுக்கு தேவையான சோளத்தை உற்பத்தி செய்வதன் ஊடாக இந்நாட்டுக்கு தேவையான திரிபோஷாவையும் விலங்கு தீவனத்தையும் இங்கு தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். இதன் நிமித்தம் தொழிற்சாலையொன்றை இங்கு அமைக்கவும் உத்தேசித்துள்ளோம், இதன் ஊடாக இந்நாட்டுக்கு தேவையான விலங்கு தீவனத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. இற்றை வரையும் இவற்றுக்காகச் செலவிடப்படும் பெருந்தொகை அந்நியச் செலாவணியையும் மீதப்படுத்திக்கொள்ள முடியும்.
மேலும் மட்டக்களப்பு உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் நிறைய உல்லாச ஹோட்டல்கள் உள்ளன. அந்த ஹோட்டல்களுக்கு தேவையான தூய குடிநீரை வழங்கக்கூடிய தண்ணீர் போத்தல்களை தயாரிக்கும்ஆலையொன்றை வாழைச்சேனையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.