சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துள்ளார். இதுபோல அப்பதவியில் அமர விரும்பிய சோனியாவுக்கு முலாயம் தடையாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தேசிய அரசியலின் மூத்த தலைவர்களின் கூற்றுகள் சமாஜ்வாதி நிறுவனர் முலாயம் சிங்கின் மறைவில் நினைவு கொள்ளப்படுகிறது. இதன்படி, கடந்த 1996-ல் பாஜக தலைமையிலான ஆட்சி அமைந்து, அடல் பிஹாரி வாஜ்பாய் முதன்முறையாக பிரதமரானார். பொறுப்பேற்ற 16-வது நாளில் மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் பிரதமர் பதவியை வாஜ்பாய் ராஜினாமா செய்தார்.
இதற்கு அடுத்த நிலையில் அதிக எம்.பி.க்களை வைத்திருந்த காங்கிரஸுக்கு பிற கட்சிகள் ஆதரவளிக்க மறுத்து விட்டன. இதனால், ஐக்கிய முன்னணி எனும் பெயரில் அமைந்த கூட்டணிக்கு காங்கிரஸும் ஆதரவளித்தது. இக்கூட்டணி சார்பில் ஜனதா தளம் கட்சியின் தலைவரான தேவகவுடா பிரதமரானார். இவரது தேர்வுக்கு முன்பாக தொடக்கத்தில் அந்த வாய்ப்புக்கு வி.பி.சிங்கின் பெயரும் இருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலர் ஆதரவளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதன் பிறகு அப்பதவிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் பெயரும் பரிசீலனைக்கு வந்தது. இதற்கு திமுக தடையாக இருப்பதாக எழுந்த பேச்சால் பிரதமருக்கான போட்டியிலிருந்து மூப்பனார் விலகினார்.
இந்தக் கூட்டணியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவும் முக்கிய அங்கம் வகித்தார். இதனால் மார்க்சிஸ்ட் கட்சியின் டெல்லி அலுவலகத்தில் அதன் தலைவர்களை சந்தித்து முலாயம் சிங் பேசினார். அப்போது அவர், மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசுவை பிரதமராக்கும்படி இடதுசாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் முலாயமின் யோசனையை ஜோதிபாசுவின் கட்சித் தலைமை ஏற்கவில்லை. இந்த வாய்ப்பை இழந்ததற்காக இன்றும் இடதுசாரிகள் வருந்துவதாகக் கூறப்படுவது உண்டு.