விஜய்யின் 67-வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக சமூக வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது. விஜய் வாரிசு படத்தை முடித்துவிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இது விஜய்க்கு 67-வது படம்.
ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வந்த மாஸ்டர் படம் வரவேற்பை பெற்றதால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு உள்ளது. இதில் விஜய் 50 வயது தாதாவாக நடிப்பதாக கூறப்படுகிறது. கதாநாயகியாக நடிக்க திரிஷா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை பரிசீலிக்கின்றனர்.
வில்லனாக நடிக்க பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்திடம் பேசி வருவதாக தகவல். சஞ்சய்தத் ஏற்கனவே கேஜிஎப் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்ததால் அவரை அணுகி உள்ளனர். சஞ்சய்தத்துக்கு ரூ.10 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாகவும் கூறுகின்றனர்.
இந்த நிலையில் விஜய்யுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சூர்யாவிடம் படக்குழுவினர் பேசி வருவதாக சமூக வலைத்தளத்தில் புதிய தகவல் பரவி வருகிறது. ஆனாலும் படக்குழுவினர் தரப்பில் இதனை உறுதிப்படுத்தவில்லை.
ஏற்கனவே இருவரும் பிரண்ட்ஸ் படத்தில் இணைந்து நடித்து இருந்தனர். கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் கிளைமாக்சில் வந்த சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.
அதுபோன்று சிறப்பு தோற்றத்தில் விஜய் படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க படக்குழுவினர் விரும்புவதாகவும், இதன் மூலம் படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு கிடைக்கும் என்று கருதுவதாகவும் கூறப்படுகிறது.