பாகுபலிக்கு பிறகு இந்தியில் சரித்திர படங்கள் அதிகம் வெளிவந்த நிலையிலும் தமிழில் அதுபோன்ற படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்குமா? என்று தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்த தயக்கத்தை பொன்னியின் செல்வன் வெற்றி தகர்த்தெறிந்து உள்ளது.
அதிக செலவில் பிரமாண்ட படங்களை தயாரிக்கும் தமிழ் பட நிறுவனங்கள், இயக்குனர்கள் பார்வை சரித்திர படங்கள் பக்கம் திரும்பி உள்ளன. சரித்திர நாவல்களை தேடிப்பிடித்து படிக்கிறார்கள். வரலாற்று கதைகள் வைத்துள்ள டைரக்டர்களுக்கும் மவுசு கூடியுள்ளது.
தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 42-வது படம் சரித்திர கதையம்சம் கொண்டது. செல்வராகவன் ஆயிரத்தில் ஒருவன் சரித்திர படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளார். ஏற்கனவே பட்ஜெட் உள்ளிட்ட சில காரணங்களால் பாதியில் நின்றுபோன சரித்திர படங்களை மீண்டும் ஆரம்பிக்கலாமா என்று யோசிக்க தொடங்கி உள்ளனர்.
1997-ல் கமல்ஹாசன் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்போடு தயாரான மருத நாயகம் சரித்திர படத்தை சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த நிலையில் நிறுத்தி விட்டனர். இதுபோல் சுந்தர்.சி 4 வருடங்களுக்கு முன்பு ஜெயம்ரவி, ஆர்யா ஆகியோரை வைத்து சங்கமித்ரா என்ற சரித்திர படத்தை டைரக்டு செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.
அந்த படமும் முடங்கி கிடக்கிறது. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பதாக இருந்த ராணா சரித்திர படமும் நின்று போனது. நடிகர் தனுஷ் மாரீசன் என்ற சரித்திர படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகி அதுவும் தயாராகவில்லை.
இதுபோல் விக்ரம் நடிக்க சோழ மன்னன் ஆதித்த கரிகாலன் வாழ்க்கையை மையமாக வைத்து கரிகாலன் என்ற சரித்திர படத்தை எடுக்க இருந்தனர். படத்தின் போஸ்டரும் வெளியானது. அந்த படமும் முடங்கி கிடக்கிறது.
வடிவேலுவின் இம்சை அரசன் 23-ம் புலிகேசி சரித்திர படத்துக்கு வரவேற்பு கிடைத்ததால் அதன் அடுத்த பாகமான இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தை எடுத்தனர். படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் டைரக்டருக்கும், வடிவேலுக்கும் ஏற்பட்ட மோதலால் படம் நின்றது.
அந்த படத்தை தயாரித்த ஷங்கர் பட அதிபர் சங்கத்தில் புகார் அளித்து படப்பிடிப்பை மீண்டும் தொடங்க முயற்சி எடுத்தும் வடிவேல் அதில் நடிக்க பிடிவாதமாக மறுத்து விட்டார். நின்று போன இந்த படங்களுக்கு பொன்னியின் செல்வன் வெற்றி மீண்டும் உயிர் கொடுக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.