இந்தியில் அதிகமான படங்களில் நடித்து வருபவர், அக்ஷய் குமார். இவர் சம்பளம் ரூ.150 கோடி என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர் ரூ.260 கோடி மதிப்பில் சொந்தமாக விமானம் ஒன்றை வைத்திருப்பதாகவும் அதில்தான் அவர் அடிக்கடி பறந்து செல்கிறார் என்றும் செய்திகள் வெளியானது.
அதை சமூக வலைதளத்தில் மறுத்துள்ள நடிகர் அக்ஷய் குமார், சிலர் இன்னும் வளரவே இல்லை என்றும் இது அடிப்படை ஆதாரமற்றப் பொய் என்றும் தெரிவித்துள்ளார்.
——-
ரூ.200 கோடியை நெருங்கும் பொன்னியின் செல்வன்
தமிழகத்தைப் பொறுத்தவரை, பொன்னியின் செல்வன் முதல் வாரம் ரூ. 127.68 கோடியை வசூலித்துள்ளது. இரண்டாவது வாரத்தின் முடிவில் படம் ரூ.181.11 கோடியை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது வாரத்தை எட்டியுள்ள நிலையில் ரூ.194.49 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை ரூ.200 கோடி வசூலை எட்டும் எனக் கூறப்படுகிறது.
——–
‘காந்தாரா’ படம் உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டது என்று படத்தின் இயக்குநர் ரிஷப் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
கன்னட மொழியில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது ‘காந்தாரா’ திரைப்படம். இந்தப் படம் இன்று தமிழில் டப் செய்யப்பட்டு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் இயக்குநரும், நடிகருமான ரிஷப் ஷெட்டி சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான முரணை சொல்ல நினைத்தேன்.
அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். நான் சிறிய வயதில் பார்த்தது, எங்கள் கலாசாரம், நம்பிக்கைகளை வைத்து இந்தப் படத்தை பண்ணினேன். பூதகோலா, தைவாரா போன்ற காவல் தெய்வங்களை வைத்து எடுத்திருக்கிறேன். அதைக் காட்சிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கமாக இருந்தது. எனக்கு நடிகர் – இயக்குநர் பேலன்சிங் சவாலாக இருந்தது.
20, 30 ஆண்டுகளுக்கு முன்பு என் ஊரில் நடந்த கதை இது. விவசாயிக்கும் ஒரு வனத் துறை அதிகாரிக்கும் இடையே நடந்த மோதல் இது. உண்மையாக நடந்த இந்தச் சம்பவத்தை வெறும் விவசாயிக்கும் – அரசு அதிகாரிக்குமான பிரச்சினையாக சுருக்கிவிடக் கூடாது என நினைத்தேன். மனிதனுக்கும் – இயற்கைக்கும் இடையேயான முரண்களாக இதைப் பார்த்தேன். அதில் உள்ளூர் தெய்வத்தையும் சேர்த்து காட்சிப்படுத்தினேன்” என்றார்.