நடிப்பதோடு நிற்காமல் படங்கள் தயாரித்து கையை சுட்டுக்கொண்ட நடிகைகள் சிலர்களை பற்றி பார்ப்போம்… முன்னணி கதாநாயகர்கள் சொந்த பட நிறுவனங்கள் தொடங்கி படங்கள் தயாரித்து வெற்றி அடைந்துள்ளனர்.
ஆனால் நடிகைகளுக்கு பட தயாரிப்பு தொழில் என்பது ராசி இல்லாமல் உள்ளது. பழம்பெரும் நடிகை சாவித்திரி படம் தயாரித்து சொத்துகளை இழந்து வீதிக்கு வந்த கதை இன்றைக்கும் திரை உலகில் பேசுபொருளாக உள்ளது.
சமீபத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று எல்லா மொழிகளிலும் பான் இந்தியா படமாக தயாரித்து வெளியிட்ட லைகர் படம் படுதோல்வி அடைந்ததால் மீள முடியாத நஷ்டத்தில் இருக்கிறார் நடிகை சார்மி. நடிகையாக இருந்தபோது நன்றாக சம்பாதித்த சார்மி தயாரிப்பில் இறங்கி பணத்தையெல்லாம் இழந்து கடனாளியாகி நிற்கிறார்.
ஜெயசித்ரா தயாரித்த ‘நானே என்னுள் இல்லை’ படம் தோல்வி அடைந்தது. தேவயானியும் படம் தயாரித்து நஷ்டமானார். நடிகை ஜெயசுதா நீண்ட காலம் சினிமாவில் நீடித்து அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தார்.
அவருக்கு சினிமா தயாரிப்பில் நல்ல புரிதலும் இருந்தது. கணவருடன் சேர்ந்து பட தயாரிப்பில் இறங்கினார். நான்கு படங்களை தயாரித்ததில் ஒரு படம் கூட வெற்றி அடையவில்லை.
நடிகை பூமிகா படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த போதே ‘தகிட தகிட’ என்ற பெயரால் படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். கதாநாயகர்களுக்கு இணையாக லேடி அமிதாப்பச்சன் என பேசப்பட்ட விஜயசாந்தி இரண்டு படங்களை தயாரித்து இரண்டுமே படுதோல்வி அடைந்தது.
நடிகை ரோஜா சமரம், லத்தி சார்ஜ் போன்ற சொந்த படங்களை தயாரித்து அதுவரை அவர் சம்பாதித்த அனைத்தையும் அந்த படங்கள் மூலம் இழந்துவிட்டதாக பல பேட்டிகளில் கூறியுள்ளார். கல்யாணியும் கே.2.கே படம் தயாரித்து நஷ்டம் அடைந்தார். இன்னும் பல நடிகைகள் நஷ்டமடைந்த தயாரிப்பாளர்கள் பட்டியலில் உள்ளனர்.