சரியும் ரூபா மோடிக்கு ப.சிதம்பரம் ஆலோசனை

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை பெறலாம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு செய்வதறியாது உள்ளது. இந்த நேரத்தில் மத்திய அரசு நாட்டில் கிடைக்கக் கூடிய அனைத்து ஆலோசனைகளையும், அனுபவத்தையும் மதித்து கவனத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி சி.ரங்கராஜன், ஒய்.வி.ரெட்டி, ராகேஷ் மோகன், ரகுராம் ராஜன் மற்றும் மான்டெக் சிங் அலுவாலியா போன்ற நிபுணர்களிடன் கருத்து கேட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முடிவெடுக்க வேண்டும். நிதியமைச்சர், ரிசர்வ் வங்கி ஆளுநர் முன்னிலையில் பிரதமர் இந்த ஆலோசனையை மேற்கொள்ளலாம் ” என்று கூறியுள்ளார்.

பாஜக கண்டனம்: இதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக ஐடி பிரிவின் தலைவர் அமித் மால்வியா இது குறித்து கூறுகையில், “ப.சிதம்பரம் பரிந்துரைத்துள்ள ஐந்து பேரும் கடந்த காலங்களில் இந்தியாவை 5 வகைகளில் நலிவடையச் செய்தவர்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

சரியும் ரூபாய் மதிப்பு: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து வருகிறது. நேற்றைய அந்நிய செலாவணி வர்த்தக தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83.12 ஆக சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். எனினும், வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு மீண்டு ரூ.82.71 ஆக நிலைபெற்றது.

கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா–உக்ரைன் இடையில் போர் தொடங்கியது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடைந்தது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தத் தொடங்கியது. இதைத் தொடர்ந்து இந்தியப் பங்குச் சந்தையிலிருந்து வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறத் தொடங்கின. மேலும், இந்தியாவின் ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்ததன் காரணமாகவும் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்தது. இதனால், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடையத் தொடங்கியது.

தற்போதைய நிலை தொடரும்பட்சத்தில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு விரைவிலே ரூ.84-ஆக சரியும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வரும் நிலையில் இவ்விவகாரத்தில் மத்திய பாஜக அரசு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனிடம் ஆலோசனை பெறலாம் என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார்.

Related posts