நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு பாதுகாக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு பாதுகாக்கப்பட்டால் தான் நாட்டு மக்கள் பாதுகாக்கப்படுவர். அதன்படி 22 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு அனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று 22 ஆவது திருத்தத்தை சமர்ப்பித்து விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பெரும்பான்மையான மக்களின் வேண்டுகோளுக்கிணங்கவே 22 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், மக்கள் எதிர்பார்ப்புக்கு மதிப்பளிப்பவர்கள் யார்? அதனை காலால் எட்டி உதைப்பவர்கள் யார்? என்பதை மக்கள் இத்தருணத்தில் மிக அவதானத்துடன் எதிர்பார்ப்பதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்:
22 ஆவது திருத்தம் தொடர்பில் பலரும் பல்வேறு விமர்சனங்களையும் கருத்துக்களையும் முன் வைப்பதற்கு அவர்களுக்கு உரிமை உள்ளது. எனினும் மக்கள் நலன் தொடர்பில் மனசாட்சியுடன் செயல்பட்டு மக்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாக வேண்டும்.
அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு தாம் இருந்த நிலைப்பாட்டிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இப்போதும் உள்ளார். நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் முழுமையாக வேண்டுமென அவர் நினைக்கவில்லை. அவரது ஒத்துழைப்பு மற்றும் ஆசீர்வாதத்துடனேயே இந்த அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவரப்படுகிறது. அந்த வகையில் அதனை நிறைவேற்றுவதற்கு நாம் பிளவுபட்டு செயற்டாமல் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும்.
நாம் வரலாறுகளை மறந்து விடக்கூடாது அதனூடாக பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
22 ஆவது திருத்தம் ஒரு கட்சியை பாதுகாக்கவோ அல்லது ஒரு குழுவை பலப்படுத்துவதற்காகவோ கொண்டுவரப்பட்டதல்ல. இது மக்களுக்காக பெரும் பொறுப்புடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து தனியே தலை தூக்க முடியாது. எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 முறை சர்வதேச நாணய நிதியத்திடம் சென்றுள்ளோம். எனினும் எமக்கான பிரச்சினைகள் முழுமையாக தீரவில்லை.
எமது உற்பத்தி பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவுக்குமே அதிகமாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதேவேளை, ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகை எமக்கு மிகவும் முக்கியமானது. அவற்றை இல்லாதொ ழிக்கும் வகையில் நாம் செயற்படக்கூடாது. அது தொடர்பில் நாம் மிக கவனமாக செயல்பட வேண்டியுள்ளது.
இந்த திருத்தத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் சில அதிகாரங்கள் பாராளுமன்றத்துக்கும் சபாநாயகருக்கும் வழங்கப்படுகிறது. நீதிமன்றம் மற்றும் அரச சேவை சுயாதீனமாக்கப்படுகிறது.
கடந்த காலங்களைப் போல் அல்லாது மத்திய வங்கி ஆளுநர்கள் அதற்கு மிக பொருத்தமானவர்களாக அவர்கள் பொருளாதார நிபுணர்களாக இருக்க வேண்டும். அவ்வாறானவர்களே அதற்கு நியமிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இதில் திருத்தம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் அரசியலமைப்பு பேரவை மூலமே நியமிக்கப்பட வேண்டும். அரச துறையில் நிலவும் மோசடிகள் களையப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற திருத்தங்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இருபதாவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளவாறு இரண்டரை வருடத்தில் பாராளுமன்றத்தை கலைக்க முடியும் என்றும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஜனாதிபதி அதை மேற்கொள்ள முடியும் என்பதற்கு பதிலாக மூன்றில் இரண்டு இன்றி பெரும்பான்மை இருந்தால் போதும் என்பது தொடர்பிலும் விடயங்கள் இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி மூலமாகவே நாட்டின் இறைமை நிர்ணயிக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரத்துக்கு அந்தளவு பலம் உள்ளது. செனட் சபை காலத்திலேயே இனங்களுக்கிடையில் சிறந்த நல்லிணக்கமும் சிறுபான்மை மக்களுக்கான பாதுகாப்பும் காணப்பட்டது.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இணைந்து 22 ஆவது திருத்தத்தை தயாரிப்பதற்கு என்னிடம் கேட்டுக் கொண்டனர்.
மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமை அரசியலமைப்பின் மூலமே உறுதிப்படுத்தப்படுகின்றது. அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியே இந்த சட்டம் மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலம் நாட்டின் புதிய கலாசாரத்துக்கு வித்திடுவதுடன் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் அரச நிர்வாகத்தை இதன் மூலம் பெற்றுக் கொள்ள முடியுமென்ற நம்பிக்கை எமக்குள்ளதென்றார்.