அது தீபாவளி, இது தீபா’வலி’ – எழுத்தாளர் ராஜேஷ்குமார்

1960களில் தீபாவளி மறக்கமுடியாதது. அப்போது எனக்கு 14 வயது இருக்கும். எங்கள் குடும்பம் நடுத்தர குடும்பத்தை விட சாதாரண குடும்பம். அப்பா ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வந்தார்.
ஐம்பது ரூபாய் சம்பளம். நான் வீட்டுக்கு முதல் பையன். ஒரு தம்பி, மூன்று தங்கைகள். இப்போது இருப்பது போல் அப்போது தீபாவளி இல்லை. தீபாவளி 3 மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும்.
புதுத்துணி எடுத்து தைக்க டெய்லரிடம் கொடுப்போம். அவர் தைத்து தரவே ஒரு மாதமாகும். 2 மாதத்துக்கு முன்பே பட்டாசு கடை வந்து விடும். 1970…களில் எங்கள் குடும்பத்திற்கு ஓரளவு வசதி வந்த பிறகு அப்பா நண்பர்களுடன் பெரிய கடை வீதி சென்று பட்டாசு வாங்கி வருவார்.
நாங்கள் தீபாவளியன்று காலையில் 5 பேரும் பட்டாசுகளை பிரித்துக்கொள்வோம்.
நாள் முழுக்க பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்வோம்.
பட்டாசின் ஒரு பகுதியை கார்த்திகை தீபத்திற்கு வைத்துக்கொள்வோம். தீபாவளி அன்று எங்கள் வீட்டில் பெரிய விருந்தே நடக்கும். ஒரு வாரத்திற்கு முன்னாடியே எங்கள் அம்மா, பாட்டி, உறவினர் பட்டாளம் ஒன்றாக கூடி பெரிய திண்ணையில் அமர்ந்து பலகாரம் செய்து மகிழ்வார்கள். நாங்களும் கூட அமர்ந்து லட்டு உருட்டுவோம்.
பாட்டி சுடும் முறுக்கு, லட்டு வாசனை தெருவெங்கும் மணக்கும்.
ஆயிரம் லட்டு தயாரிப்பார்கள். தெருவே கோலாகலமாக இருக்கும். மாலையில் எல்லோர் வீடுகளிலும் பட்டாசு விட்டுக்கொண்டு இருப்பார்கள். அனைவரும் அமர்ந்து சந்தோஷமாக பேசிக்கொண்டு இருப்பார்கள்.
அந்த இனிமையான காட்சிகளை இப்போது நினைத்துக்கூட பார்க்க முடியாது. பலகாரங்களை உறவினர்களுக்கு பகிர்ந்து கொள்வோம். புதிய துணி தைத்து வீட்டில் உள்ள பெட்டியில் வைத்து இருப்போம்.
தினமும் அதை எடுத்து பார்த்துக்கொண்டே இருப்போம். தீபாவளி அன்று தலைக்கு எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு அப்புறம்தான் அதை போடணும் என்று அம்மா சொல்வார்கள்.
அதனால் அதை தினமும் எடுத்துவைத்து அதன் அழகை பார்த்துவிட்டு மீண்டும் பெட்டியில் போட்டுவிடுவோம். புதுத்துணி என்பதே தீபாவளிக்கு தீபாவளிதான். அந்தகாலத்தில் ஜிலேபி, மைசூர்பாகு பண்ற வீடு பணக்காரவீடு. நம்ம வீட்டில் லட்டு மட்டும்தான் செய்வார்கள். நாங்கள் எந்த வீட்டில் இருந்து ஜிலேபி, மைசூர்பாகு வருகிறது என்று பார்ப்போம்.
அதை தேடி எடுத்து சாப்பிடுவோம். அந்தகாலத்தில் இது மிகப்பெரிய விஷயம். தீபாவளி அந்த காலத்தில் மூன்று மாதம் கொண்டாடக்கூடிய பண்டிகையாக இருந்தது.

Related posts