ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது முதிர்ந்த நபர்களை அழைக்கும் செல்லப்பெயராக அதனை அவருக்கு உள்ளூர் மக்கள் வழங்கியுள்ளனர்.
அவர், பூமியில் ஒரு பகுதியில் குழி தோண்டி அதற்குள் தூங்கி வந்துள்ளார். இதனால், கிராமவாசிகள் சேர்ந்து அவருக்காக திறந்தநிலையிலான செங்கல்லால் கட்டப்பட்ட குடிசை ஒன்றை உருவாக்கி தந்துள்ளனர்.
அதிலேயே அவர் பல காலம் தனிமையில் வசித்து வந்துள்ளார். அமவ் ஹாஜி பல ஆண்டுகளாக குளிக்காமல் இருந்து வந்துள்ளார். இதனால், உடம்பில் அழுக்கு சேர்ந்து உள்ளது.
நோய் தாக்கி விடும் என்ற அச்சத்தில் அவர் குளியல் எடுத்து கொள்ளவில்லை. அவரது இளமை காலத்தில் ஏற்பட்ட உணர்வுப்பூர்வ பின்னடைவுகளே, வித்தியாசமுடன் அவர் நடந்து கொள்ள காரணம் என அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு, தெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், ஹாஜி புதிதாக சமைத்த உணவை தவிர்த்து விட்டார். அவற்றுக்கு பதிலாக, அழுகி போன முள்ளம்பன்றி இறைச்சியை சாப்பிடுவதுடன், விலங்குகளின் கழிவில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்களை புகைக்கும் வழக்கம் கொண்டுள்ளார் என தெரிவித்து இருந்தது. இந்த சூழலில், நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியில், அவரது கிராமவாசிகள் முதன்முறையாக ஒரு சில மாதங்களுக்கு முன்பு, கட்டாயப்படுத்தி அவரை குளிக்க கொண்டு சென்றுள்ளனர்.
60 ஆண்டுகளுக்கும் கூடுதலாக குளிக்காமல் வாழ்ந்து வந்த அவரை குளியலறையில் வைத்து குளிப்பாட்டி உள்ளனர். இந்த நிலையில், ஹாஜி தனது கிராமத்தில் கடந்த ஞாயிற்று கிழமை மரணம் அடைந்து உள்ளார் என தெரிவித்து உள்ளது.
பல தசாப்தங்களாக குளியல் எடுத்து கொள்ளாமல் இருந்த, உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்படும் ஹாஜி தனது 94-வது வயதில் உயிரிழந்து உள்ளார்.