ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட காந்தாரா படம், வெளியான 20 நாட்களிலேயே, கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கே.ஜி.எப். படத்தின் பிரமாண்டத்திற்குப் பிறகு, இந்திய ரசிகர்களின் பார்வை, கன்னட சினிமாவின் மீதும் பதிந்திருக்கிறது. அந்த நம்பிக்கையை ‘777 சார்லி’, ‘காந்தாரா’ போன்ற திரைப்பட இயக்குனர்களும், நடிகர்களும் காப்பாற்றி வருகிறார்கள் என்பதே பெருமைக்குரியதுதான்.
எம்.பி.ஏ., பட்டதாரியான ரிஷப் ஷெட்டி, கன்னட அரசு சினிமா கல்லூரியில் பிலிம் டைரக்ஷனில் டிப்ளமோ பட்டமும் பெற்றவர். ஆரம்பத்தில் தொலைக்காட்சி தொடர் இயக்குனர் ஒருவரிடம் உதவியாளராக பணிபுரிந்த ரிஷப் ஷெட்டி, 2010-ம் ஆண்டு ‘நம் ஏரியாலி ஆன்டினா’ என்ற படத்தின் மூலமாக சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானார். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும், இயக்கமும் அவர் கனவாக இருந்தது. 2016-ம் ஆண்டு கன்னடத்தின் இளம் நாயகனான ரக்ஷித் ஷெட்டியை வைத்து, ‘ரிக்கி’ என்ற படத்தை இயக்கினார்.
அதே ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். தற்போது இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா இந்தப் படத்தில்தான் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
2019-ம் ஆண்டு வெளியான ‘பெல்பாட்டம்’ படத்தின் மூலமாக கதாநாயகனாக உயர்ந்தார். இந்தப் படத்தில் அவர் டிடெக்டிவ் கதாபாத்திரம் ஏற்றிருந்தார். நகைச்சுவையோடு கூடிய அந்த கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரை கதாநாயகனாக ஏற்றுக்கொண்டனர். இந்த நிலையில் ரிஷப் ஷெட்டி, தான் எழுதிய கதையில் நடித்து, இயக்கவும் செய்த ‘காந்தாரா’ திரைப்படம் கடந்த மாதம் 30-ந் தேதி கன்னட மொழியில் வெளியானது.
கடந்த 15-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. கே.ஜி.எப். திரைப்படங்களை தயாரித்திருந்த ‘ஹாம்பாலே பிலிம்ஸ்’ இந்தப் படத்தையும் தயாரித்திருந்தது. தயாரிப்பு செலவு ரூ.16 கோடி மட்டுமே.உடுப்பி பக்கம் உள்ள மலைவாழ் மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் தெய்வ நம்பிக்கை மற்றும் வழிபாட்டு முறையையும், நம்பிக்கை துரோகத்தையும், வலியையும் வெளிப்படுத்தும் விதமாக மண்வாசனையோடு கலந்து கொடுத்திருந்த இந்தப் படம், இந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களாலுமே ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.
ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், வெளியான 20 நாட்களிலேயே, கன்னடத்தில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரூ.50 கோடிக்கு மேலும், வெளிநாட்டில் ரூ.15 கோடிக்கு மேலும் வசூல் செய்திருக்கிறது.
கடந்த 20 நாளில் உலக அளவில் மொத்தமாக இந்தப் படம் ரூ.175 கோடி வசூல் சாதனையை நெருங்கியிருக்கிறது. இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.