காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கேரளாவில் உள்ள தைக்குடம் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள காந்தாரா என்ற கன்னட படம் வசூல் சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரூ.17 கோடி செலவில் தயாரான இந்த படம் இந்தியா முழுவதும் இதுவரை ரூ.170 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. கே.ஜி.எப் படத்துக்கு பிறகு இந்திய அளவில் அதிகம் பேசப்படும் கன்னட படமாக காந்தாரா மாறி உள்ளது.
ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் படத்தை பாராட்டியுள்ளனர். பூத கோலா என்ற நாட்டுப்புற நடனமாடும் தெய்வ நர்த்தகர்கள் படும் துயரத்தையும் படத்தில் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த படம் குறித்து சர்ச்சை கருத்தை வெளியிட்ட கன்னட நடிகர் சேத்தன் குமார் மீது இந்து அமைப்பினர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் அவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் காந்தாரா படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் கேரளாவில் உள்ள தைக்குடம் இசைக்குழுவினரின் இசை ஆல்பத்தில் இருந்து திருடப்பட்டு இருப்பதாக புகார் கூறப்பட்டு உள்ளது.
படக்குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று இசைக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.