தேர்தல் முறைமையை திருத்துவதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளை 101 இன் விதிகளுக்கு அமைய இந்தக் குழுவில் 21 உறுப்பினர்களுக்கு மேல் இருக்கக் கூடாது என அமைச்சர் விஜயதாச சபாநாயகருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இந்தக் குழுவிற்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களை சபாநாயகர் பெயரிட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
——-
இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் குடியுரிமை பெறுதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் நடமாடும் சேவைகள் எதிர்வரும் 31 ஆம் மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சுமார் ஏழாயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்டவர்கள் வட மாகாணத்திற்கு திரும்பி மீண்டும் குடியேறியுள்ளனர்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் மேற்பார்வையில், அமைச்சுடன் தொடர்புடைய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அரச அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.
—–
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க திறைசேரியின் ஆசியாவிற்கான பிரதி உதவி செயலாளர் ரொபர்ட் கப்ரோத், திறைசேரி செயலாளர் மற்றும் மத்திய வங்கி ஆளுநரைச் சந்தித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்டுள்ள ஊழியர் மட்ட ஒப்பந்தம் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சிகள் தொடர்பில் எடுக்கப்படக்கூடிய நிலையான தீர்வுகள் தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்க தூதுவர் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார்.