தமிழ் தெய்வீக மொழி என்பதால்தான் திராவிடர் கழகத்தினர் மற்றும் திமுகவினர், ஆங்கிலத்தை புகுத்தி தமிழைச் சிதைத்தனர் என கடலூரில் நடந்த பாஜக ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
தமிழ்மொழிக்கு எதிராக திமுக செயல்படுவதாக கூறி, பாஜகவினர் நேற்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். கடலூரில் தலைமை தபால் நிலையம் எதிரே, நடந்த ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியது: கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 48 ஆயிரம் மாணவர்கள் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை.
‘தமிழ் வளர்க்கிறோம்’ எனக் கூறிவரும் திமுகவின் சதித்திட்டம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2 லட்சம் பொறியியல் பட்டப்படிப்பு இருக்கைகள் உள்ளன. இதில் 5 சதவீதமான 1,377 இடங்கள் தமிழ் வழி படிப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு தமிழ் வழியில் பயில விரும்பியவர்கள் 50 பேர் மட்டுமே.
திமுகவின் மொழி அரசியலைப் பார்க்கும்போது, அவர்கள் தொடக்கக் காலத்தில் காங்கிரஸை ஓரம் கட்ட இந்தி எதிர்ப்பு முழக்கத்தை எடுத்தனர்.
அதற்கு முன்பாக ஆங்கிலத்தை வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பெரியார் கூட, 1965-ல் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்தார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், பெரியார் பேசும்போது, ‘இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது இந்தி வேண்டாம் என்பதற்காக அல்ல. ஆங்கிலம் வேண்டும் என்பதற்காக’ என்று பேசியுள்ளார். தமிழ் மொழியைக் காட்டிலும் ஆங்கிலத்துக்கு ஆதரவு கரம் நீட்டினார்.
தமிழ் என்பது ஒரு தெய்வீக மொழி. ஆண்டவன், இறைவன், இறையாண்மை, சனாதன தர்மம் அனைத்தும் கலந்திருக்கக் கூடிய ஒரே மொழி தமிழ். தமிழை ஊக்குவித்தால், தமிழ் மண்ணில் இறை நம்பிக்கையை ஊக்குவிக்க நேரிடும் என்பது அவர்களுக்கு தெரியும். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் தமிழை அழிக்க வேண்டும்.
அதற்கு மாற்றாக ஆங்கிலத்தை கொண்டு வரவேண்டும் என்பதுதான் திமுகவின் திட்டம். அதைத்தான் ஆரம்பகால அரசியலில் புகுந்தினார்கள். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, திமுகவினரிடையே, ‘இந்தி எப்போதும் வேண்டாம். ஆங்கிலம் எப்போதும் வேண்டும்’ என்ற முழக்கம் இருந்ததே தவிர, ‘தமிழ் வேண்டும்’ என அவர்கள் ஒருபோதும் கூறவில்லை. தெய்வீக மொழியான தமிழை அழிக்க ஆங்கிலத்தை கையிலெடுத்து அரசியல் செய்து வருகின்றனர்.