சர்தார் ஒரு படமல்ல; படிப்பினை. இயக்குநர் மித்ரன் படத்தை சமூக பொறுப்புடன் இயக்கியிருக்கிறார்’ என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த அக்டோபர் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சர்தார்’. ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன், லைலா உள்ளிட்டோர் நடிந்திருந்த இந்தப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். தண்ணீர் மாஃபியா குறித்தும், உளவாளியின் வாழ்க்கை குறித்த கதையை அடிப்படையாக கொண்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில், படம் கடந்த 5 நாட்களில் ரூ.50 கோடி வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ‘சர்தார்’ படத்தை புகழ்ந்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘இந்த படம் என்று சொல்ல முடியாது; இது ஒரு படிப்பினை. இந்தக் கருத்தை வலியுறுத்தி நான் பேசியிருக்கிறேன். தண்ணீர் மிகப்பெரிய வியாபாரப்பொருளாக மாற்றப்பட்டுள்ளது. உலக உயிர்களின் உயிர் உடைமையை சந்தைப்பொருளாக மாற்றியதிலிருந்து எவ்வளவு பெரிய பேராபத்தை நோக்கிய பயணித்துக்கொண்டிருக்கும் என்பதை புரிய வரும். இந்தப்படம் அதை மிகவும் ஆழமாக விளக்கிச்சொல்கிறது.
மித்ரன் தரமான படத்தை உருவாக்கியிருக்கிறார். இரும்புத்திரையிலும் பொறுப்புடன் ஒரு படத்தை உருவாக்கியிருந்தார். அவரிடம் சமூக பொறுப்புடன் ஒரு பார்வை இருக்கிறது. ஒளிப்பதிவு, இசை என தரமாக உள்ளது. அனைத்தும் நேர்த்தியாக இருக்கிறது. சர்தார் ஒரு சிறந்த படைப்பு. அன்பும் பாராட்டுகளும்” என்று தெரிவித்துள்ளார்.