இரட்டைக் குடியுரிமை தொடர்பான விசாரணை இன்று (31) நிறைவடையவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களை கண்டறிய விசேட விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இதன்படி, பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் பிறந்தநாள் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கங்களை கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் கோரியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்பிறகு, குடிவரவுத் திணைக்களம் உரிய பட்டியல்களைச் சரிபார்க்க ஆரம்பித்துள்ளது.
எவ்வாறாயினும், இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினராக எவரும் அடையாளம் காணப்படவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும் என குடிவரவு குடியகழ்வு திணைக்களம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
——
எதிர்வரும் காலங்களில் ராஜதந்திர சேவைக்கு அரசியல் ரீதியான நியமனங்கள் மேற்கொள்ளப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் காணப்படும் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்கள் என்பனவற்றிற்கு
அரசியல்வாதிகள் அல்லது அவர்களின் நண்பர்களை நியமிக்கும் வழக்கத்தை ஒழித்து, தகுதியானவர்களுக்கு மட்டும் நியமனங்களை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பிரதான நாடு ஒன்றில் கடமையாற்றி வரும் இட்டைக் குடியுரிமை கொண்ட தூதுவர் ஒருவர் அடிக்கடி களியாட்டங்களை நடாத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி இந்தியா, சீனா, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு புதிய தூதரக அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.