பாலம் உடைந்து பலி எண்ணிக்கை 141ஐ கடந்தது

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது.

பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது. இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 6.30 மணி அளவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

தகவல் அறிந்து தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆற்றுக்குள் விழுந்தவர்களில் பலர் நீரில் மூழ்கி இறந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும், குழந்தைகளும் என்று தெரிகிறது. நீரில் மூழ்கிய மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. எனவே பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று அதிகாலை நிலவரப்படி, பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 141 ஆக உயர்ந்துள்ளதாக குஜராத் தகவல் துறை தெரிவித்தது. மேலும், இதுவரை விபத்தில் சிக்கிய 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்தில் சிக்கியவர்களை தேடுதல் மற்றும் மீட்கும் பணியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, என்.டி.ஆர்.எப், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.மீட்பு பணி இன்னும் நடந்து வருகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்த, இன்று அதிகாலை 3 மணிக்கு ராணுவ வீரர்கள் குழு, சம்பவ இடத்திற்கு சென்றடைந்தது என்று குஜராத் தகவல் துறை இன்று காலை வெளியிட்ட தகவலில் தெரிவித்தது.

——-

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில் இசை நிகழ்ச்சி ஒன்றின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கோ தலைநகர் கின்ஷாசாவில் உள்ள தியாகிகள் அரங்கத்தில் காங்கோ பாடகர் பாலி இபுபாவின் இசை நிகழ்ச்சிக்காக 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குவிந்தனர்.

ரசிகர்கள் பலர் விஐபி இருக்கைகள் மற்றும் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் முண்டியடித்துக் கொண்டு போய் உட்கார்ந்தனர். 80 ஆயிரம் பேர் அமரும் அரங்கில் அதை விட அதிகமானோர் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரங்கத்திற்கு வெளியேயும் நீண்ட வரிசையில் பலர் காத்துக்கிடந்தனர்.

அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரங்கத்திற்கு வெளியே இருந்த கட்டுக்கடங்காத கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.

அதில் 2 காவலர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்ததுடன், 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts