யாழில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு பஸ் ஒன்று வவுனியா, நொச்சிமோட்டையில் பாலத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 16 பேர் காயமடைந்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.
இன்று (05) அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரு அதி சொகுசு பஸ்கள் ஒன்றை ஒன்று முந்தி வேகமாக பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு அதி சொகுசு பஸ் வவுனியா, நொச்சிமோட்டை பாலத்துடன் மோதி தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. குறித்த விபத்தில் பஸ் சாரதி மற்றும் பெண் ஒருவர் உட்பட மூவர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன், 16 பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 16 பேரில் 4 பேர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
விபத்துக்குளான குறித்த பேரூந்தின் பின்னால் வந்த பிறிதொரு அதி சொகுசு விபத்துக்குள்ளான பஸ் உடன் மோதி விபத்துக்குள்ளாவதை தடுக்கும் வகையில் பஸ்ஸின் சாரதி செயற்பட்டதனால், பாலத்தின் மறுபுறத்தில் வீதியை விட்டு விலகி வாய்க்கால் பகுதிக்குள் சென்றுள்ளது. குறித்த அதி சொகுசு பேரூந்தில் சென்றவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இவ் விபத்துக்கள் தொடர்பில் வவுனியா மற்றும் ஓமந்தைப் பொலிசார் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அத்துடன் விபத்துக்குளான இரு பஸ்களையும் பாரம் தூக்கியின் துணையுடன் இராணுவத்தினர் மீட்கும் நடவடிக்கையில் இன்று காலை (05) ஈடுபட்டனர். இதன் காரணமாக ஏ9 வீதிப் போக்குவரத்த் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்டபட்டிருந்ததுடன் நொச்சி மோட்டை பாலத்தின் இரு மருங்கிலும் ஒரு கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றதையும் அவதானிக்க முடிந்தது.
குறித்த விபத்துச் சம்பவத்தில் சாரதியான கோவிலடி, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எஸ். சிவரூபன் (32), யாழ் பல்கலைக்கழக மாணவியான நாவலம்பிட்டி பகுதியைச் சேர்ந்த இராமகிருஸ்ணன் அஜாநெரி (23), தம்பசிட்டி, பருத்தித்துறையைச் சேர்ந்த இராமலிங்கம் நிதர்சன் (24) ஆகியோரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.