தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக் கோரும் மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக திமுக தலைமையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவானது இந்தியக் குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ள மனுவில், “தமிழகம் வெவ்வேறு மதம், மொழி, சாதியைப் பின்பற்றுவர்கள் அமைதியாக வாழும் சொர்க்கம். ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கைகள் மீது தமக்கு இருக்கும் அவநம்பிக்கையை வெளிப்படையாக பிரச்சாரம் செய்கிறார். பிரிவினையை தூண்டும் வகையில் பேசுகிறார்.
இது அரசாங்கத்துக்கு தர்மசங்கடத்தை உருவாக்குகிறது. தமிழக அரசு, தேசத்தின் மதச்சார்பற்ற கொள்கையில் ஈடுபாடு கொண்டுள்ளது.
ஆனால் ஆளுநர் அபாயகரமான, பிரிவினைவாத, மதவாத பிரச்சாரங்களை பொதுவெளியில் முன்னெடுக்கிறார். அவரது பேச்சுக்கள் திட்டமிட்டு வெறுப்பை உள்ளடக்கியுள்ளன.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி, இந்தியா உலகின் மற்ற நாடுகளைப் போல் ஒரு மதத்தை சார்ந்துள்ளது என்று கூறியிருந்தார். அவருடைய இந்தப் பேச்சு இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்தியா அரசியல் சாசனம் மற்றும் சட்டங்களையே சார்ந்து இருக்கிறது தவிர எந்த மதத்தையும் சார்ந்து இல்லை.
அதுபோல் ஆளுநர் சனாதன தர்மத்தைப் போற்றியும், உலகப் பொதுமறையான திருக்குறளுக்கு மதச்சாயம் பூசியும் பேசியுள்ளார். தமிழ் உணர்வுகளையும், மாண்பினையும் காயப்படுத்தியுள்ளார்.
ஆளுநர் என்பவர் அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். மீண்டும் பதவி கிட்டுமா என்ற எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும். ஆளுநரின் கவனம் எல்லாம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும்.
முதல்வர், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகளை ஆதரிப்பவராக இருக்க வேண்டும். ஆளுநர் ரவி தான் தேர்தலில் வெற்றி பெற்றவர் இல்லை என்பதை மறந்து செயல்படுகிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஆளுநர் ரவி சட்ட மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் காலம் தாழ்த்துவது பற்றியும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அரசியல் சாசன சட்டப்பிரிவு 159ன் படி தான் எடுத்த உறுதிமொழியையே ஆளுநர் ரவி மீறிவிட்டதால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று குடியரசுத் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்ட மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.