ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது ஐ.நா.வின் கடமை என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “நடுக்கடலில் கப்பல் விபத்தில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருந்த போது சிங்கப்பூர் அரசால் மீட்கப்பட்டு, வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 306 ஈழத்தமிழர்களை மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது மனிதநேயமற்ற செயல்!
போர் – பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் வாழ்க்கை நரகமாகி விட்டதால் தான் ஈழத்தமிழர்கள் தங்களின் உயிரையும் பணயம் வைத்து தஞ்சம் தேடி கடல் பயணம் மேற்கொண்டனர். அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது நரகத்திலிருந்து தப்பியவர்களை மீண்டும் நரகத்தில் தள்ளும் செயலாகும்!
தஞ்சம் தேடி வெளியேறியவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவது அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமையாக அமைந்து விடும். அதனால் தான் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தி வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் போராட்டம் நடத்துகின்றனர்!
ஈழத்தமிழர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்ய வேண்டியது ஐ.நா.வின் கடமை. அதை உணர்ந்து, ஏற்கனவே நான் கேட்டுக் கொண்டவாறு, 306 ஈழத்தமிழர்களுக்கும் அவர்கள் விரும்பும் நாட்டில் தஞ்சம் தஞ்சம் பெற்றுத் தர ஐ.நா. அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!” என்று ராமதாஸ் கூறியுள்ளார்.