ஏற்றுமதியை இலக்காகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய பொருளாதாரமே இலங்கையின் ஒரே குறிக்கோளாக இருப்பதனால், முப்படைகளின் பாதுகாப்பு மற்றும் மூலோபாயத் திறன்களின் அவசியம் குறித்தும் அதற்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பதன் முக்கியத்துவம் தொடர்பிலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று (11) நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
ஆயுதப் படைகள் மற்றும் 2030 பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் ஏன் இவ்வளவு கவனம் செலுத்துகிறது என சிலர் கேள்வி எழுப்பலாம், ஆனால் அவ்வாறு செய்யாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாம் பிறந்த காலத்தில் போலன்றி தற்போது வேறுபட்டதொரு உலகில் வாழ்கின்றோம். நாம் பிறந்த போது இந்து சமுத்திரத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. அப்போது இந்து சமுத்திரம் தொடர்பில் எவரும் கவனம் செலுத்தவில்லை.” எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கப்பல் போக்குவரத்தை சுதந்திரமாக மேற்கொள்ள முடியாவிட்டால் ஏற்றுமதி பொருளாதாரத்தின் நோக்கங்களை பூர்த்தி செய்ய முடியாது என தெரிவித்த ஜனாதிபதி, பொருட்களைக் கொண்டு செல்வதில் தடைகள் ஏற்பட்டால் என்ன நடக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.
2021 ஆம் ஆண்டு மக்கள் நாட்டை விட்டு வெளியேற முடியாமல் போனதையும், தரை அல்லது கடல் வழியாக பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை தோன்றிய அனுபவத்தை நினைவு கூர்ந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், நாம் இருக்கும் சூழல் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனாலும், பொருட்களை கொண்டு செல்லும் திறனிலேயே நாட்டின் எதிர்காலம் தங்கியுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
னைய தரப்பினரின் செயற்பாடுகள் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் எனினும் அதன்போது, அரசியல் மற்றும் இராஜதந்திர திறன்களைப் போன்று இராணுவத் திறன்களையும் நாம் பயன்படுத்தி எமது குடிவரவு உரிமைகள் மற்றும் தரை மற்றும் கடல் மார்க்கமாக பயணிப்பதற்கான எமது உரிமைகள் என்பன எவ்வகையிலும் தடைபடாத வகையில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் வலியுறுத்தினார்.
சாதாரணப் பல்கலைக்கழகத்தை விட சேர் ஜோன் கொத்தலாவல பல்கலைக்கழகத்தில் சேர்வதையே பலரும் விரும்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்காக தமது பாராட்டைத் தெரிவித்ததோடு, சமூக பாடங்களுக்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மற்றுமொரு வளாகத்தை குருநாகலில் ஆரம்பிக்குமாறு நிதியமைச்சிற்கும் பாதுகாப்புச் செயலாளருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் ஜெராட் டி சில்வா, உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் மற்றும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.