பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கே முன்னுரிமை என்ற தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பின் காரணமாக விஜய் நடிக்கும் ‘வாரிசு’ படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “தெலுங்கு திரைப்படங்களின் தயாரிப்பு செலவு அதிகரிப்பு, தயாரிப்பாளர்களின் நலன், தெலுங்குத் திரைப்படத் துறையை காப்பாற்றுதல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 08ம் தேதி நடைபெற்ற தெலுங்குத் திரைப்பட வர்த்தக சபையின் அவசரக் கூட்டத்தில், சங்கராந்தி(பொங்கல்) மற்றும் தசரா(விஜயதசமி) ஆகிய பண்டிகைகளின் போது, திரையரங்குகளில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்; அந்தப்படங்களுக்கு அளித்தது போக, மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளரும், தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையின் தற்போதைய துணைத் தலைவருமான ஸ்ரீ தில்ராஜு, கடந்த 2019ஆம் ஆண்டு ஊடகங்களிடம் தெரிவித்த விஷயமும் தற்போதைய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதன்படி, சங்கராந்தி மற்றும் தசரா பண்டிகைகளில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், அவைகளுக்குப் போக மீதமிருக்கும் திரையரங்குகளை தெலுங்கில் டப் செய்து வெளியிடப்படும் படங்களுக்கு கொடுக்க வேண்டுமென்றும் தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில், வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வாரிசு’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. தெலுங்கில் ‘வாரசுடு’ என்ற பெயரில் வெளியாகும் இந்தப்படம் நேரடித்தமிழ்ப்படம் என இயக்குநர் வம்சி தெரிவித்திருந்த நிலையில், தெலுங்கில் டப் செய்து இந்தப்படம் வெளியாகும் சூழல் உள்ளதால் வாரிசு படத்திற்கு குறைவான திரையரங்குகளே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. மேலும் வாரிசு படம் வெளியாகும் அதே தினத்தில் ‘வீர சிம்ம ரெட்டி’ மற்றும் ‘வால்டர் வீரய்யா’ போன்ற நேரடி தெலுங்கு படங்கள் வெளியாகப்போவதால், வாரிசு படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்படும் என்று கருதப்படுகிறது.