நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்டிருப்பது, மழை பாதிப்பு, தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக அமித் ஷா கூறி இருப்பது, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம், 2024 நாடாளுமன்றத் தேர்தல் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலுக்கு அளித்த சிறப்பு நேர்காணல்…
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளான நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேர் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதை எவ்வாறு உணர்கிறீர்கள்?
நீதிமன்றத் தீர்ப்புக்குள் நுழைய நான் பெரிதும் விரும்பவில்லை. நீண்டகாலமாக நடைபெறும் நிகழ்வு அது. ஆனால், நீதிமன்றம் ஒன்றை தெளிவுபடுத்தி இருக்கிறது. அவர்கள் குற்றமற்றவர்கள் அல்ல என நீதிமன்றம் சொல்லவில்லை. ஆயுள் தண்டனைக் கைதிகள் நீண்ட காலமாக சிறையில் இருப்பதாகக் கருதி அவர்களை நீதிமன்றம் விடுவித்திருக்கிறது. எனவே, அவர்கள் வாழ்நாள் முழுவதும் குற்றவாளிகளாகத்தான் உலா வரவேண்டும்.
என்னைப் பொறுத்தவரை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதற்குரிய தண்டனையை அனுபவிக்க வேண்டும். அல்லது நீதிமன்றம் அவர்களை நிரபராதிகள் என விடுவிக்க வேண்டும். இது இரண்டுமே அவர்கள் விஷயத்தில் நடக்கவில்லை. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 36 இஸ்லாமிய இளைஞர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாகவே சிறையில் இருந்து வருகிறார்கள். இன்னும் அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஏன் தமிழக சட்டமன்றம், தமிழகத்தில் இருக்கின்ற ஜனநாயக சக்திகள் அவர்களை விடுவிக்க வேண்டும் என கோரவில்லை. அப்படி என்றால் இஸ்லாமிய இளைஞர்களுக்கு ஒரு நீதி, ராஜீவ் கொலையாளிகளுக்கு ஒரு பார்வை என செல்கிறதா? இது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட வேண்டும்.
நாம் ஒரு கருத்தை சொல்கிறோம் என்றால், அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஏராளமான தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக சிறைகளிலேயே இருக்கிறார்கள். அவர்களை ஏன் விடுவித்திருக்கக் கூடாது. அவர்கள் என்ன பாவம் செய்தார்கள். எனவே, இவர்களின் விடுதலைக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் இது குறித்து சிந்திக்க வேண்டும். இது சமூகத்திற்கு நல்லதல்ல.
ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது தங்களுக்கு ஏற்புடையதல்ல என்று பாஜகவும் கூறி இருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
இதற்கும் அரசியலுக்கும் சம்பந்தமில்லை. எங்களோடு ஒத்துப் போகிறவர்கள் இதில் வேறுபடுகிறார்கள்; எங்களோடு ஒத்துப் போகாதவர்கள் இதில் வேறுபடவில்லை என்பதற்காக இரண்டு அரசியலையும் சமன் செய்வது கூடாது.
பொருளாதார ரீதியாக பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல்
செய்யப்போவதாக திமுக கூறி இருக்கிறது. இதில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன?
அந்த சட்ட முன்வடிவே காங்கிரஸ் கட்சி கொண்டு வந்ததுதான். நீண்ட காலம் கழித்து பாஜக நாடாளுமன்றத்தில் அதை சட்டமாக நிறைவேற்றியது. நீதிமன்றம் அதை ஏற்றிருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் கட்சி நீதிமன்றத்தின் முடிவை வரவேற்றிருக்கிறது. ஆனால், தீர்ப்பளித்த 5 நீதிபதிகளின் கருத்துகளில் இரண்டு விதமான கருத்துகள் வந்துள்ளன. ஒவ்வொரு கருத்தையும் தீவிரவமாக ஆலோசிக்க வேண்டி இருக்கிறது. இதற்காக, ப. சிதம்பரம், அபிஷேக் சிங்வி ஆகியோரை காங்கிரஸ் நியமித்திருக்கிறது.
தமிழகத்தில் பெய்த கனமழை காரணமாக ஏராளமான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. தமிழக அரசு எத்தகைய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?
மிகப் பெரிய சேதம் ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் நீரில் மூழ்கி இருக்கின்றன. எனவே, இது குறித்து கணக்கிட்டு விவசாயிகளுக்கு 100% இழப்பீடு வழங்க வேண்டும் என்பது தமிழ்நாடு காங்கிரசின் கருத்து. முதல்வர் ஸ்டாலின் நேரடியாக டெல்டா மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு இருக்கிறார். எனவே, தமிழ்நாடு அரசு அதற்கான முழு ஏற்படுகளையும் செய்யும். விவசாயிகளுக்குத் தேவையான இழப்பீட்டை சரி செய்யும் என்று நம்புகிறேன்.
சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கின்றன. சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கருதுகிறீர்கள்?
சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டு சென்னையில் அதிக அளவு மழைநீர் தேங்கவில்லை. ஏறக்குறைய 90% நீர் வடிந்து விடுகிறது. கடந்த ஓராண்டு காலத்தில் மாநில அரசும், சென்னை மாநகராட்சியும் இதற்காகப் பணியாற்றி இருக்கிறார்கள். இதற்காக முதல்வரையும், அமைச்சர்களையும், அதிகாரிகளையும் பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். இதில் 100% சதவீதம் வெற்றி பெற்றுவிட்டதாக அரசும் சொல்லவில்லை. ஓராண்டில் 100% வெற்றி பெறுவது இயலாத காரியம். எனினும், ஓராண்டு காலத்தில் மாநில அரசு இமாலய வெற்றியை ஈட்டி இருக்கிறது. அதற்காக நான் அவர்களை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார். தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
வெற்றிடமான இடத்தில் இருந்து அவர் வந்த காரணத்தால் இங்கும் வெற்றிடம் இருந்திருக்குமோ என்று அவர் யோசித்திருக்கிறார். தமிழகம் அரசியல் ரீதியில் ஒரு பலமான மாநிலம். எல்லா அரசியல் இயக்கங்களும் அவர்களுக்குரிய இடத்தில் வலிமையாகவே இருக்கிறார்கள்.