நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியாக ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் அனுப்பும் திட்டத்தை நாசா செயல்படுத்தியுள்ளது.
53 ஆண்டுகள் பிறகு நிலவுக்கு மனிதர்களை அனுப்பி நீண்ட காலம் தங்க வைத்து ஆய்வு செய்வதற்காக ஆர்ட்டெமிஸ் என்ற பயண திட்டத்தை நாசா கையில் எடுத்துள்ளது.
இந்த திட்டம் மூலம் 2025ம் ஆண்டு நிலவுக்கு மனிதனை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே இருமுறை ஆர்ட்டெமிஸ் – 1 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், இன்று காலை 11:34 மணியளவில் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டை நிலவுக்கு ஏவ திட்டமிடப்பட்டது.
வானிலையில் சாதகமான சூழல் இருப்பதால் ராக்கெட்டை ஏவுவதற்கு 90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
ஒருவேளை ராக்கெட் ஏவுதளத்தில் சிக்கல் ஏற்பட்டால் நவம்பர் 19 அல்லது 25ம் திகதி ராக்கெட்டை ஏவ மாற்று திகதிகளாக நாசா முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஆர்டெமிஸ் – 1 ராக்கெட்டை நாசா வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. எரிபொருள் கசிவு காரணமாக 45 நிமிடங்கள் தாமதமாக ஆர்டெமிஸ் – 1 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
எரிபொருள் கசிவு காரணமாக ஏற்கனவே 2 முறை ராக்கெட்டை விண்ணில் ஏவுவது நிறுத்தப்பட்ட நிலையில் 3வது முயற்சியாக இன்று நிலவுக்கு ராக்கெட்டை நாசா அனுப்பியது.