அரசாங்கம் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை எவ்வாறு தேடிக்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் பாதீட்டில் ஏன் குறிப்பிடப்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இந்த கேள்வியினை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வெளிநாட்டுக் கடன்களை செலுத்துவதற்கும் வருடத்திற்கு 12 ஆயிரம் பில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. 12 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் எவ்வாறு பெற்றுக்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பில் 2023 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய அவர்களே நீங்களே இதற்கான பதிலை குறிப்பிட வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல சபையில் வலியுறுத்தினார்.
தெளிவான பதில் ஒன்றை வழங்குவேன் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இழுத்தடிப்பு செய்த போதிலும், நீங்கள் நிதி தொடர்பிலான இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் தற்பொழுதே தெரிவிக்க வேண்டும் என லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் தொடர்ந்தும் பதிலளிக்க இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முயற்சித்த போதிலும், உரிய தரப்பினரிடம் ஆலோசித்து பின்னர் தெரிவிக்குமாறும், தற்பொழுது ஆசனத்தில் அமருமாறும் லக்ஷ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.
12 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர்களை எவ்வாறு பெற்றுக்கொள்வது என திடீரென வினாவெழுப்பினால் எவ்வாறு பதிலளிப்பது என இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய கேள்வி எழுப்பினார். பொறுப்பான கேள்விக்கு பொறுப்புடன் பதிலளிக்க வேண்டுமானால் அதற்கான கால அவகாசத்தை வழங்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.
மீண்டும் குறுக்கிட்ட லக்ஷ்மன் கிரியெல்ல, 12 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலரானது அடுத்து வருடத்திற்கு மாத்திரம் செலுத்த வேண்டிய கடன் தொகை அல்ல. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக செலுத்த வேண்டிய கடன் தொகை என்பதால் நாவிளிம்பில் அதற்கான பதில் காணப்படுவது அவசியமாகும் என குறிப்பிட்டார்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம் ஆட்சி அமைக்குமாயின் வெளிநாட்டு கடன்களை இலகுவில் செலுத்தும். அதற்கான உறுதிமொழிகளையும் பல நாடுகளின் தூதுவர்கள் எங்களிடம் வழங்கியுள்ளனர். இலங்கை வரலாற்றில் நடப்பு அரசாங்கத்திற்கு எதிராக மாத்திரமே பொருளாதார குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையினால் வெளிநாட்டு உதவிகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே கிடைக்கப்பெறும். பொருளாதார குற்றச்சாட்டுக்களுக்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச எவ்வாறான பதில்களை முன்வைத்தார் என்பது எவருக்கும் தெரியாது. ஏனெனில் நீதி அமைச்சர் நடப்பு அரசாங்கத்தின் அங்கத்தவராகவும், கடந்த காலங்களில் ஏனைய கட்சிகளின் அங்கத்தவராகவும் இருந்திருக்கின்றார். ஆகையினால் அவரின் பதில்களை சர்வதேசம் ஏற்றுக்கொண்டதா அல்லது நிராகரித்ததா என தெரியவில்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச உதவிகள் கிடைக்காத நிலையில், அதனை சீர் செய்ய வரிகளை விதித்து மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையையே அரசாங்கம் முன்னெடுக்கும் என லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.