ரிலீசாகாமல் 500 சிறு பட்ஜெட் படங்கள்

தமிழில் 500-க் கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ஒரு காலத்தில் பணம் கொழிக்கும் தொழிலாக இருந்தது சினிமா. பெரிய நடிகர்கள், சிறிய நடிகர்கள், பிரபலமான டைரக்டர்கள், புதுமுக டைரக்டர்கள் என்றெல்லாம் பாகுபாடு பார்க்காமல் படங்களுக்கு போட்ட பணத்தில் இருந்து பல மடங்கு வசூலை வாரி கொடுத்தது.

சினிமாவை சார்ந்து இருந்த எல்லோரும் செழிப்பான வாழ்க்கையை நடத்தினார்கள். அதன்பிறகு நிலைமை கொஞ்சம் கொஞ்சமாய் மாறி பெரிய படங்கள், சிறிய படங்கள் என்று ஏற்றத்தாழ்வுகள் உருவாகி இப்போது பெரிய நடிகர்கள் படங்களும், பெரிய பட்ஜெட்டில் தயாராகும் படங்களும் மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பெரிய படங்கள்தான் ஓடும் என்ற மாயையால் சிறு பட்ஜெட் படங்களை வாங்கி வெளியிட நாதி இல்லை.

இதனால் நூற்றுக்கணக்கான சிறு பட்ஜெட் படங்கள் திரைக்கு வர முடியாமல் வருடக்கணக்கில் பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றன. இன்னொரு புறம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் பான் இந்தியா பட கலாசாரமும் சிறுபட்ஜெட் படங்களை தலையெடுக்க விடாமல் நசுக்கி வைத்துள்ளது.

முன்னணி தமிழ் நடிகர்களின் படங்கள் ரிலீசாகாதபோது சிறுபட்ஜெட் படங்களுக்கு தியேட்டர்கள் கிடைத்து விடும் என்று கருதிக்கொண்டு இருந்தால் பிறமொழி நடிகர்களின் பான் இந்தியா படங்கள் அதிக தியேட்டர்களை பிடித்துக் கொள்கின்றன.

கன்னட படமான கே.ஜி.எப்., தெலுங்கு படங்களான பாகுபலி, புஷ்பா போன்று வரும் பல பிறமொழி பான் இந்தியா படங்கள் தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி பணத்தை அள்ளி உள்ளன. இப்போது வரைக்கும் தமிழில் 500-க் கும் மேற்பட்ட சிறுபட்ஜெட் படங்கள் வெளிவராமல் முடங்கி கிடப்பதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன.

இதுகுறித்து தயாரிப்பாளர்கள் சங்க கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம் கூறும் போது, “2 வருடங் களுக்கு முன்பு வரை திரைக்கு வர முடியாமல் 360 சிறுபட்ஜெட் படங்கள் முடங்கிக் கிடந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 500 ஆக உயர்ந்து இருக்கிறது” என்றார்.

“ஒரு படத்தை ரூ.3 கோடி செலவில் எடுத்து இருந்தாலும் மொத்தம் ரூ.1500 கோடி முதலீட்டு தொகையை திரும்ப எடுக்க முடியாமல் சிறுபட தயாரிப்பாளர்கள் தவிப்பில் இருக் கிறார்கள்” என்றும் தெரிவித்தார்.

இந்தப் படங்கள் மூலம் சினிமாவில் சாதிக்கலாம் என்ற ஆசையோடு வந்த புதுமுக நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் லட்சிய கனவுகள் புதையுண்டு கிடக்கின்றன.

இதை சரிப்படுத்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில ஆண்டு களுக்கு முன்பே பெரிய நடிகர்கள் படங்களை பண்டிகை காலங்களில் மட்டுமே திரையிட வேண்டும் என்றும் சிறுபட்ஜெட் படங்களை மற்ற நாட்களில் திரையிடலாம் என்றும் நெறிமுறைகள் வகுத்தது.

ஆனால் அது நடைமுறைப்படுத்தாமலேயே இருக்கிறது. தியேட்டர்களில் சிறு பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் வருவது இல்லை என்றும் பெரிய டைரக்டர்கள், பிரபல நடிகர்கள், படத்தை தயாரித்தது பெரிய நிறுவனமா? என்பதையெல்லாம் பார்த்தே ரசிகர்கள் வரு கிறார்கள் என்றும் ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.

ஆனால் குறைந்த பட்ஜெட்டில் எடுத்து தற்போது திரைக்கு வந்துள்ள லவ் டுடே படம் பெரிய படங்களையெல்லாம் வீழ்த்தி வசூல் சாதனை நிகழ்த்தி வருகிறது. ஒரு தலை ராகம் ரிலீசானபோது 2 நாட்களில் படத்தை தியேட்டர்களில் இருந்து தூக்கிவிட்டனர்.

பிறகு மீண்டும் ரிலீஸ் செய்தபோது தமிழகத்தை உலுக்கியது.

எனவே சிறு பட்ஜெட் படங்களை வெளியிட வழிவிட்டால்தானே அதற்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கிறதா? இல்லையா? என்பதை அறிய முடியும் என்றார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

முடங்கி கிடக்கும் 500 சிறு பட்ஜெட் படங்களுக்கும் விடிவு காலம் பிறக்குமா?

என்ற தவிப்போடு அந்த படங்களுக்கு பணம் போட்ட தயாரிப்பாளர்கள் காத்து இருக்கிறார்கள்.

Related posts