ஓமான் கடத்தலின் பிரதான சந்தேகநபர் கைது

ஓமான் மற்றும் டுபாய் ஆகிய நாடுகளுக்கு மனித கடத்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்கேதநபர் இன்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

——-

சுற்றுலா விசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய அரபு இராச்சியத்திலுள்ள அபுதாபிக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள பெண்களில் சுமார் 12 பேர் கடந்த 16 ஆம் திகதி அங்கிருந்து பலாத்காரமாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த ஆட் கடத்தல் சம்பவத்தில் இலங்கையின் விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்படி ஓமானில் பணியாற்றும் இலங்கை தூதரக அதிகாரி பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

Related posts