பருவநிலை மாற்றத்தை சமாளிக்கவும், அதன் தீவிரத்தை குறைக்கவும் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டம் கடந்த 1992-ம் ஆண்டு உருவாக்கப்பட்டு, 1994-ம் ஆண்டில் அது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.
இந்த பணித்திட்டத்தில் கையெழுத்திட்டுள்ள 198 நாடுகளும், 1995 முதல் ஆண்டுதோறும் பருவநிலை மாநாட்டை கூட்டி, பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விவாதித்து வருகின்றன.
அந்த வகையில் ஐ.நா. பருவநிலை மாற்ற பணித்திட்டத்தின் 27-வது மாநாடு எகிப்து நாட்டின் ஷார்ம் எல் ஷேக் நகரில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பருவநிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான தங்களின் பரிந்துரைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து உரையாற்றினர்.
இந்த மாநாட்டில் முக்கியமாக பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் இழப்பீடு வழங்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இழப்பு மற்றும் சேத நிதியை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் ஒப்புக்கொண்டன.
இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் எனவும், இதன் மூலம் வளரும் நாடுகளில் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் முதல் முறையாக இழப்பு மற்றும் சேத நிதியை நிறுவ ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.