பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் ‘லவ் டுடே’.
2கே கிட்ஸ்களின் சமகால காதலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தில் நாயகியாக இவானா நடித்துள்ளார். தவிர, யோகிபாபு, சத்யராஜ், ராதிகா உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் கடந்த நவம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
படம் முதல் நாள் ரூ.3 கோடி அளவில் வசூலித்தது. இரண்டாம் நாள் ரூ.5.35 கோடியும், மூன்றாம் நாள் ரூ.6.25 கோடியும் வசூலித்து மொத்தம் மூன்று நாட்களில் படம் கிட்டத்தட்ட ரூ.14 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. 11-ஆம் நாள் முடிவில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடியை வசூலித்திருந்தது. இந்நிலையில், தற்போது படம் வெளியாகி இன்றுடன் 20 நாட்கள் கடந்துவிட்ட சூழலில், உலக அளவில் படம் ரூ.70 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரூ.9 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பட்ஜெட்டில் உருவான படம் ரூ.70 கோடியை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.