அடுத்த வருடம் விடுமுறை நாட்களைக் குறைத்து பாடசாலை நாட்களை அதிகரிப்பதன் மூலம் அடுத்த வருடத்திற்கான பாடத்திட்டங்களை அந்த வருடத்திலேயே பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அதற்கிணங்க அந்த வருடத்திற்குள்ளேயே பாடத்திட்டங்களை பூர்த்தி செய்யும் வகையில் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என தெரிவித்த அமைச்சர், பாடசாலை உபகரணங்களுக்கான செஸ்வரியை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அது தொடர்பான யோசனை எதிர்வரும் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்,
இந்த வருடத்திற்குள் முன்னர் திட்டமிட்டவாறு பாடத் திட்டங்களை குறுகிய காலத்தில் நிறைவு செய்யவே தீர்மானித்திருந்தோம். ஆனால் உயர்தரப் பரீட்சையை ஜனவரிக்கு ஒத்திப்போட நேரிட்டதால், தவணைகள் தள்ளிப் போயுள்ளன. எவ்வாறாயினும் 2023 மார்ச் மாதத்தில் பாடத்திட்டங்களை நிறைவுக்கு கொண்டு வர முடியும்.
இந்நிலையில் அடுத்த ஆண்டில் விடுமுறைக் காலத்தை குறைத்து, பாடசாலை நாட்களை அதிகரித்து அடுத்த வருடத்திற்கான அனைத்து பாடத்திட்டங்களையும் அந்த வருடத்திற்குள்ளேயே நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
அவ்வாறு செய்தால் உயர்தரப் பரீட்சை, மற்றும் சாதாரண தரப் பரீட்சையையும் உரிய காலத்தில் நடத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.