நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் வகையில் புலம் பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
சில புலம்பெயர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டுள்ள நிலையில் அவை சாத்தியமானதாக அமைந்துள்ளதாகவும் சபையில் தெரிவித்த அவர், ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து மேற்படி அலுவலகத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற போக்குவரத்து, ஊடகத்துறை, நெடுஞ்சாலைகள், மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களுக்கான வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டு குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் யுத்தம் முடிவுற்று பல ஆண்டுகள் கடந்துள்ள போதும் எம்மால் இன்னும் முழுமையான சமாதானத்தைக் கட்டி யெழுப்ப முடியாமல் போயுள்ளது.
அதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை இல்லாதொ ழித்து புதிய சட்டம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதே வேளை நீண்ட காலம் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த தமிழ் அரசியல் கைதிகள் பலரை விடுவிக்கவும் முடிந்துள்ளது.
20 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். அவர்களில் தமிழ் மக்கள் பெரும்பாலானோர் காணப்படுகின்றனர்.
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் அவர்கள் மூலம் பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவர்களுடன் நான் இணைப்பை முறையாக முன்னெடுக்கும் வகையில் சர்வதேச தொடர்பு அலுவலகம் ஒன்றை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்ததாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.