பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் பாரியளவிலான சிறுநீரகக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாக அண்மையில் “அத தெரண உகுஸ்ஸா” சர்ச்சைக்குரிய செய்தியை வௌியிட்டிருந்தது.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் பேசப்பட்ட இந்தக் கடத்தல் தொடர்பில் அதிகாரிகள் கவனம் செலுத்திய நிலையில் விசாரணைகள் கொழும்பு குற்றப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, விசாரணைகளை மேற்கொண்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் சமர்ப்பணங்களை முன்வைத்தனர்.
நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் தங்களுடைய சிறுநீரகத்தை வழங்கியுள்ளதாகவும் சந்தேகநபர்களுக்கு ஒரு சிறுநீரகத்திற்காக 150 இலட்சம் கொடுப்பதாக உறுதியளித்த போதிலும் பணம் வழங்கப்படவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் ஒன்றரை வயது குழந்தையின் தாயாரும் உள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், இக்குழுவினர் வேறு பல தனியார் மருத்துவமனைகளுக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் நீதிமன்றத்தில் தெரியவந்தது.
இணையம் மூலம் கடத்தல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான் சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டார்.
இதற்கிடையில், சுகாதார அமைச்சகமும் உடனடி நடவடிக்கை எடுத்து, குறித்த வைத்தியசாலையில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையும் தற்காலிகமாக நிறுத்தியது.
அத்துடன், இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து பூர்வாங்க அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு சுகாதார அமைச்சு நியமிக்கப்பட்ட குழுவிற்கு அறிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலை தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு மேல் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு சுகாதார அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
அதன் பிரகாரம், இந்த வைத்தியசாலையின் தலைமை வைத்தியர் மற்றும் ஏனைய அதிகாரிகளை அழைத்து வாக்குமூலம் பெற உள்ளதாக உக்குஸ்ஸாவுக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகளின் முடிவுகள் விரைவில் நாட்டுக்கு தெரியவரும் வரை “அத தெரண உகுஸ்ஸா” தொடர்ந்தும் அவதானத்துடன் இருக்கும்.