முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமர் பதவிக்கு கொண்டு வருவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று மூன்று நாட்களுக்கு முன் இடம்பெற்றுள்ளது.
மொட்டு கட்சியின் தெரிவு செய்யப்பட்ட சிலரை மட்டும் அழைத்து பத்தரமுல்லையில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் இந்த விருந்தும் கலந்துரையாடலும் இடம்பெற்றுள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் கலந்துகொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை பிரதமராக நியமிப்பதற்காக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரை பதவி விலக்கி கோட்டாபய ராஜபக்சவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வந்து அவரை பிரதமராக்குவது தொடர்பில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
கட்சியில் தெரிவு செய்யப்பட்ட ஒரு குழுவினரே அழைக்கப்பட்டிருந்ததோடு நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதோடு, இவ் விருந்தை கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பலமான அரசியல்வாதி ஒருவரே ஏற்பாடு செய்திருந்ததாக அவ் இணையம் மேலும் தெரிவித்துள்ளது.